புதன், ஏப்ரல் 02 || துன்பங்கள் வரும்போது நாம் எப்படி எதிர்கொள்கிறோம்?
- Honey Drops for Every Soul
- Apr 2
- 1 min read
வாசிக்க: 2 நாளாகமம் 33: 9-13
என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் .. உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. - யோனா 2:7
தேவபிள்ளைகள் உட்பட எல்லாருமே மனஅழுத்தம் மற்றும் நெருக்கத்தினால் உபத்திரவப்படுகிறார்கள். இத்தகைய உபத்திரவங்களை நாம் எப்படி எதிர்கொள்ளுகிறோம்? இரண்டு வழிகளில் நாம் எதிர்கொள்ளலாம் - ஒன்று, இயற்கையான வழி, மற்றொன்று வேதத்தின் வழி. உபத்திரவங்கள் தாக்கும்போது, கசப்பான அனுபவமும் குற்றஞ்சாட்டும் மனப்பான்மையுமே எளிதான இயற்கையான வழி. நம்மேலும், மற்றவர்கள்மேலும், கடைசியில் தேவன்மேலும் நாம் கசப்படைகிறோம். விசுவாசம் அற்றவர்கள் உபத்திரவம் வந்தால் கசப்படைவார்கள், காரணம் அவர்கள் தேவனை அறியவில்லை. ஆனால், தேவபிள்ளைகள் கசப்படைவதற்குக் காரணம் - ஒன்று, அவர்கள் தேவன்பேரில் அன்புகூராமலிருக்கிறார்கள், அல்லது அவர் விடுதலையை, சுகத்தைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள்!

உபத்திரவங்களை எப்படி மேற்கொள்ளமுடியும் என்று வேதம் நமக்குக் கூறுகிறது. அதாவது, நாம் ஜெபிக்கவேண்டும்! நாம் அவரைத் தேடவேண்டும் என்ற நோக்கத்தோடு தேவன் நமக்கு உபத்திரவங்கள் பாடுகளை அனுமதிக்கிறார். மனாசே இஸ்ரவேலின் பொல்லாத ராஜா. தேவன் அவனைப் பலமுறை எச்சரித்தும் பயனில்லை. எனவே, அவனைத் தண்டிக்க தேவன் அசீரியரை அனுப்பி, அவனை விலங்கிட்டு, பாபிலோனுக்கு சிறைபிடித்துக் கொண்டுபோக அனுப்பினார். 2 நாளாகமம் 33:1213ல் நாம் வாசிப்பது, தான் நெருக்கப்படுகையில் அவன் தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான் என்பதே. அவன் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார். யோனா, மற்றொரு சிறந்த உதாரணம். அவன் மீனின் வயிற்றிலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, அவர் அவனது சத்தத்தைக் கேட்டு அவனை விடுவித்தார். (யோனா 2:7)
அன்பானவர்களே, நமக்கும் தேவனுக்கும் இடையே பிளவை உண்டுபண்ண உபத்திரவத்துக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது; நம்மை நேசிக்கின்ற அவர்மேல் கசப்பு கொள்ளக்கூடாது. மாறாக, நொறுங்கின இருதயத்தோடு நாம் அவரிடம் நெருங்கிச் சேர்ந்து, ஜெபத்தின்மூலம் நம்முடைய அங்கலாய்ப்பை அவரிடம் கொட்டிவிடுவோம்.
ஜெபம்: ஆண்டவரே, என் உபத்திரவத்தில், உம்மையறியாத அவிசுவாசிகள் போல நான் முறுமுறுப்பதில்லை. முன்னே உமது நன்மையை அனுபவித்த நான், நீர் ஏன் இதை அனுமதித்தீர் என்று அறியும்படி என்னைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, உமது சமாதானத்தை, விடுதலையைப் பெற்றுக்கொள்வேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Коментарі