கர்த்தர் விசாரிக்கிறவர்! பயப்படாதிருங்கள்!
... பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு. (மாற்கு 5:36)
நாம் எல்லோருமே ஏதாவது ஒன்றிற்கு பயப்படுகிறவர்களாகத்தான் இருக்கிறோம். இயேசுவின் சீஷர்கள் படவில் பயணம் செய்தபோது எதிர்கொண்ட புயலினால் எப்படி பயந்துபோனார்கள் என்பதை மத்தேயு 8:23-26ல், வாசிக்கிறோம். யாத்திராகமம் 14ம் அதிகாரத்தில், தங்களுக்குப் பின்னாக வந்த பார்வோனின் திரள்சேனையையும், தங்களுக்கு முன்னாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த செங்கடலையும் கண்டு, தப்பிப்பதற்கு எந்த வழியும் இல்லையே என்று இஸ்ரவேலர் எப்படி பயந்தார்கள் என்பதையும் வாசிக்கிறோம். நமது வாழ்விலும் ஒன்றன்பின் ஒன்றாய் பிரச்சனைகள் எழும்பும்போது, தப்ப வழியேயில்லை எனத் தோன்றும்போது, நாமும் அப்படித்தான் பயந்துபோகிறோம். ஆனால், தம் சீஷர்களுக்காகக் கடும்புயலை அமர்த்தின தேவன், தம்
ஜனங்களுக்காக செங்கடலைப் பிளந்த தேவன், இன்றும் நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் அதிகாரமுடையவராயிருக்கிறார். அவர் நிச்சயம் நம்மையும் விடுவிப்பார். மாற்கு 5ம் அதிகாரத்தில் சாகக்கிடந்த யவீருவின் மகளை இயேசு சுகமாக்கின சம்பவத்தை வாசிக்கிறோம். இயேசு தம் வீட்டிற்கு வருவது தடைபட்டதைக் கண்டு, தன் மகள் மரித்துப்போனாள் என்ற செய்தியைக் கேட்டு பயந்துபோன யவீருவிடம் இயேசு, பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி அவனது மகளை எழுப்பினார்! ஆகவே, திடன் கொள்ளுங்கள்! தன் சகோதரன் ஏசா எங்கே தன்னையும் தன் மனைவி பிள்ளைகளையும் கொன்றுபோடுவானோ என்று யாக்கோபு பயந்திருந்தான்.
அன்பு நண்பர்களே, யாக்கோபு பயந்தவண்ணம் நடவாமல், ஏசாவின் கண்களில், யாக்கோபுக்கு தயவு கிடைத்தது. எனவே, நாம் பயப்படவேண்டாம்.
வியாதியா? நாம் பயப்படவேண்டாம்
பணப்பிரச்சனையா? நாம் பயப்படவேண்டாம்
மனிதரால் வரும் தொல்லையா? நாம் பயப்படவேண்டாம்.
ஆண்டவர் நம் வாழ்வில் ஆளுகை செய்கிறார்!
ஜெபம்: தேவனே, பிரச்சனைகள் என்னைச் சூழும்போது நான் பயப்படாமல், உம்மையே நம்ப உதவிசெய்யும். வேதத்தில் எழுதப்பட்டுள்ள அருமையான சம்பவங்கள், நீர் என்னையும் பொறுப்பெடுத்து, விடுவித்து உயர்த்துவீர் என உம்மை நம்பியிருக்க என்னை உற்சாகப்படுத்துவதற்காக நன்றி. ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários