கர்த்தரின் தாமதம் அவரது மறுப்பல்ல
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் .. கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! ... - ஆபகூக் 1:2
ஆபகூக் தன்னுடைய செய்தியை ஒரு ஜெபத்தோடு தொடங்குகிறான் - அவன் கர்த்தரைக் கூப்பிடுகிறான். இங்கே கூப்பிடுதல் என்ற வார்த்தைக்கு அலறுதல், மிகுந்த சத்தத்தோடு கதறுதல், சஞ்சலப்பட்ட இருதயத்துடன் சத்தமாய்க் கூப்பிடுதல் என்று அர்த்தப்படுகிறது. கண்ணீர்விட்டு அழும் எரேமியாவைப் போல ஆபகூக் தேவ ஜனங்களின் பாவத்தைக் கண்டு மிகவும் துக்கப்பட்டான். எனவேதான் ஜெபத்துடன் தொடங்குகிறான் அவன். தலைமுறை தலைமுறை தோறும் பரிசுத்தவான்களின் இருதயக் குமுறலும் இப்படித்தான் இருக்கின்றது. ஆபகூக் கதறியபோதும் ஒரு பதிலும் வருவதைப்போல் தோன்றவில்லை. பரலோகம் அமைதியாயிருந்தது. எல்லாப் பக்கத்திலும் தீவினை அக்கிரமங்கள் மிக அதிகமானது.
தேவனது நியாயப்பிரமாணம் மறக்கப்பட்டு, நியாயம் இல்லாமற்போனது; துன்மார்க்கர் நீதிமான்களைத் துன்புறுத்தினார்கள். ஆபகூக்கினது கேள்வி, யோபுவினது வினாவைப்போலவே இருந்தது. யோபு 30:20ல், உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர் என்று யோபு கதறுகிறான். சுருங்கச் சொன்னால்: தேவனே, நாங்கள் அறிந்திருக்கிறபடி நீர் நல்லவரும் நீதியுள்ளவருமாயிருந்தும் ஏன் எதுவுமே செய்யாமல் இருக்கிறீர்? என்று இருவருமே கேட்கின்றனர். தான் நீதிமானாய் இருந்தும் தனக்கு ஏன் இத்தகைய கொடுமையான துன்பங்கள் நேரிட்டன, தேவனுடைய நீதியை வேண்டுமென்றே மதிக்காத மற்றவர்கள் விடுதலையுடன் சுற்றித்திரிகின்றார்களே, தேசத்தில் நடக்கும் அநீதி, தவறுகளைக் கர்த்தர் நெடுநாட்களாய்ப் பொறுத்துக்கொள்கிறாரே என்று ஆபகூக் ஆச்சரியப்பட்டான். தேவன் செயலற்றவராய், பாராமுகமுள்ளவராய்க் காணப்பட்டார்.
அன்பானவர்களே, ஒவ்வொரு விசுவாசியும் இத்தகைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். துயரப்படும்போது நாமும் தேவனிடம், எதுவரைக்கும் ஆண்டவரே என்று உரத்த சத்தமாய் கதறுகிறோம். உண்மை என்னவென்றால் தேவனது அமைதியை நாம் புரிந்துகொள்வது மிகவும் கடினம். தெய்வீக அமைதியானது நிச்சயமாய் தெய்வீக அக்கறையின்மையல்ல. கண்டுகொள்ளாத பார்வையாளராய் தேவன் இருக்கமாட்டார். அவர் தம்முடைய திட்டங்களை சீக்கிரமாகவோ தாமதமாகவோ, தவறாகவோ செயல்படுத்தாமல் உள்ளார்ந்த விதமாய் வல்லமையுடன் செயலாற்றிக்கொண்டு வருகிறார்!
ஜெபம்: ஆண்டவரே, என் துக்கத்தில், எதுவரை ஆண்டவரே எனக் கதறுகிறேன். உம் பதிலுக்காக வெகுநாட்கள் காத்திருக்கிறேன், ஆனால் மௌனமாயிருக்கிறீர். ஆயினும் உம் தாமதம் மறுப்பல்ல என்பதால் நம்பிக்கையை விடாதிருக்கிறேன். என்னில் உம் நோக்கத்தை நன்மைக்கேதுவாக ஏற்ற நாளில் நிறைவேற்றுவீர். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios