செவ்வாய், அக்டோபர் 01
வாசிக்க: எரேமியா 32: 17-20
தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை. - (லூக்கா 1:37)
ஒரு விசுவாசியின் பாதை பல கஷ்டங்கள், சோதனைகளால் நிறைந்திருக்கும். அவன் எங்கு திரும்பினாலும் தடைகளும், எதிர்ப்புகளும் அவனைச் சந்திக்கும். அச்சமயங்களில் என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியாது; பாதை முட்களால் அடைக்கப்பட்டதுபோல் தோன்றுவதால் குழப்பமடையலாம்! எப்பக்கம் பார்த்தாலும், ஏதோ ஒன்று அவனை ஊக்கம் இழக்கச் செய்யலாம். நாம் வேறெதையோ அல்லது வேறொருவரையோ பார்த்தாலும் பயன் ஒன்றுமில்லை; எனவே, தேவனை மட்டுமே நாம் நோக்கவேண்டும் - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை! (லூக்கா 1:37) அவராலே செய்யக்கூடாதது ஒன்றுமே இல்லை. தாம் வாக்குத்தத்தம் பண்ணின அனைத்தையும் அவரால் செய்யக் கூடும், அவர் செய்தும் முடிப்பார்! ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உலகத்தை வார்த்தையாலே படைத்த அவருக்கு எதுவுமே சாத்தியம். அவருக்கு எதுவுமே கடினமல்ல. அவராலே மன்னிக்க முடியாத மோசமான இருளான பாவம் ஒன்றுமே இல்லை. கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும். அவரால் மாற்றமுடியாத எந்தவொரு கடினமும் தீமையுமான இருதயம் ஒன்றுமில்லை. கல்லான இருதயத்தை சதையான இருதயமாக அவரால் மாற்றமுடியும். ஒரு விசுவாசியினால் செய்யமுடியாத கடினமான வேலை ஒன்றுமே இல்லை. நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய நமக்குப் பெலனுண்டு. மேற்கொள்ளமுடியாத எந்த கடினமான காரியமும் ஒரு விசுவாசிக்கு இல்லை. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவர் யார்? மலைகளும் தாழ்த்தப்பட்டு சமபூமியாகும்!
அன்பானவர்களே, தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து கேள்விகளும் சந்தேகங்களும் அடிக்கடி நம் மனதில் எழும்பலாம். நம் விழுந்துபோன ஆத்துமாவின் சுபாவத்தினால் வரும் விளைவு அது. நம் விசுவாசம் மிகவும் பலவீனமானதாக இருக்கலாம். ஆனால், ஒரு சத்தியம் நம் மனதில் என்றென்றும் இருக்கவேண்டும் - தேவனால் கூடாதது ஒன்றுமில்லை! எனவே நாம் களிகூர்ந்து முன்னேறுவோம்; விசுவாசத்தை திடப்படுத்தி, தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களை எதிர்பார்ப்போம். தேவன் நம்மோடிருந்தால் நாம் வெற்றியின் பக்கம் இருப்போம். எனவே, தேவனுடைய உன்னத வல்லமையால் அவருடைய நிச்சயமான வாக்குத்தத்தத்தால் பிரகாசமுள்ள எதிர்காலமும் நம்பிக்கையும் நமக்கு உண்டு என்று நாம் உற்சாகப்படுவோம்!
ஜெபம்: ஆண்டவரே, நான் உமது வல்லமை கிருபையை, ஞானத்தை பெலனை, அன்பை மனதுருக்கத்தை, மகிமை மாட்சிமையை நோக்கி, என் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என உறுதியாய் சொல்லுவேன். கலங்கமாட்டேன், திகிலடையமாட்டேன். உம்மாலே நான் என்றும் ஜெயம்பெறுவேன். ஆமென்.
Comments