செப்டம்பர் 25 வாசிக்க: யாக்கோபு 3:13-18
ஞானத்தைக் கண்டடைகிற மனுஷ(ன்).. பாக்கியவான்.. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும்... உத்தமமானது. (நீதிமொழிகள் 3:13)
சரியான நேரத்தில் சரியான காரியம் செய்வதற்கும், சரியான காலத்தில் சரியான வார்த்தை சொல்வதற்கும், சரியான விதத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கும் ஒருவருக்கு உள்ள திறமையே ஞானம் எனப்படுகிறது. இன்றைய வேதப்பகுதி இரண்டு வகையான ஞானத்தைப் பற்றிப் பேசுகிறது. முதலாவது ஞானம் லௌகீக சம்பந்தமானது; ஜென்ம சுபாவத்துக்குரியது; பேய்த்தனத்துக்கடுத்தது. இரண்டாவது ஞானம் பரத்திலிருந்து வரும் ஞானம். அது சுத்தமும், சமாதானமும், அன்புள்ளதும், தாழ்மையும், இரக்கம் நிறைந்ததும், நற்கனிகள் உள்ளதும், பாரபட்சமற்றதுமான மாயமற்ற ஞானமாகும் என்று யாக்கோபு தமது நிருபத்தில் விளக்குகிறார். எனவே, நாம் அந்தப் பரலோக ஞானத்தையே ஆவலாய் விரும்புவோம்.
அன்பானவர்களே, நமக்கு ஏன் பரம ஞானம் தேவையாயிருக்கிறது? முதலாவது, அந்த ஞானம் நமக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது. தேவ ஞானத்தைப் பெறாதவர்கள் பயம், சந்தேகம், கவலை மற்றும் துக்கம் போன்றவற்றால் தாக்கப்படுகிறார்கள். இரண்டாவதாக, தேவஞானம் உள்ள மனிதன் கனத்தைப் பெறுகிறான். (நீதிமொழிகள் 3:16) ஆண்டவர் இயேசு எந்த மனுஷனைக் காட்டிலும் அதிகமான ஞானத்தைப் பெற்றிருந்தார். தன் வாயைத் திறந்து அவர் பேசினபோதெல்லாம் தேவஞானம் விளங்கினதால் ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். எனவே, மனிதரிடத்தில் அவர் கனம் பெற்றிருந்தார். மூன்றாவதாக, தேவ ஞானத்தினால் ஐசுவரியம் பெருகுகிறது. (நீதிமொழிகள் 3:16) சாலொமோன் ராஜா ஞானத்தில் மாத்திரமல்ல, ஐசுவரியத்திலும் சிறந்து விளங்கினான். நான்காவதாக, ஞானமுள்ள மனுஷன் தீர்க்காயுசைப் பெறுவான். (நீதிமொழிகள் 3:16) மேலும், ஞானவான்கள் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறார்கள். (நீதிமொழிகள் 11:30) இப்படிப்பட்ட சிறப்புகளைப் பெற்ற இந்த தெய்வீக ஞானம் முத்துக்களைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது. இச்சிக்கத்தக்க வேறெதுவும் அதற்கு நிகரல்ல. (நீதிமொழிகள் 3:15) எனவே, நாம் இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள ஆவலாய் வாஞ்சிப்போம். அனுதினமும் ஆண்டவரிடத்திலிருந்து இந்தப் பரம ஞானத்தைப் பெற்று சீருடன் வாழ்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, நான் நல்ல காரியத்தைச் செய்ய, நல்ல வார்த்தைகளைப் பேச, நல்ல தீர்மானங்களை எடுக்க உமது பரம ஞானத்தால் என்னை நிரப்பும். எனது அன்றாட வாழ்வில் உலக ஞானமல்ல, உமது ஞானத்தையே பயன்படுத்தி மகிழ்ச்சியாக, சமாதானமாக வாழ கிருபை தாரும். ஆமென்.
Comentarios