top of page

வெள்ளி, நவம்பர் 01 தெளிதேன் துளிகள்

Updated: Nov 1, 2024

வாசிக்க: ரூத் 2: 11-13 தெளிதேன் துளிகள்

தேவனது மறைவில் இருப்பவர் பாதுகாப்புடன் இருக்கிறார்

... இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக. (ரூத் 2:12)

ரூத்துக்காக போவாசால் ஏறெடுக்கப்பட்ட ஜெபம் இது. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த அவளுக்கு நிறைவான பலன் கிடைக்கவேண்டுமென அவன் ஜெபித்தான். செட்டை என்பது மூடுதல் என்ற அடிப்படை அர்த்தத்தைக் கொடுக்கிறது. தம்முடைய பிள்ளைகளுக்கு தேவன் காண்பிக்கும் பல அம்சக் கவனிப்பை அழகான எடுத்துக்காட்டு மூலம் வேதவார்த்தை விளக்குகிறது. கோழிக்குஞ்சுகள் ஆபத்தை உணர்கின்றபோது தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் ஓடித் தஞ்சம் புகுவது நமக்கு பரிச்சயமானது அல்லவா? தங்கள் தாயின் செட்டைகளின் மறைவிலே மிதமான சூட்டில், சௌகரியமாக குஞ்சுகள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கின்றன! வானத்தில் புயல் வீசினாலும், கடுமையான மழை சொரிந்தாலும், கழுகுகள் மேலே பறந்தாலும், தாய் தன் செட்டைகளால் பத்திரமாக மூடிக்கொள்வதால், குஞ்சுகள் பாதுகாப்பாய் இருக்கின்றன.

தெளிதேன் துளிகள்
தேவனது மறைவில் இருப்பவர் பாதுகாப்புடன் இருக்கிறார்

தேவன் தருகின்ற பாதுகாப்பை இந்த உருவகம் காண்பிக்கிறது. பாதுகாப்பற்ற இளம் பறவை போலிருந்த ரூத் தேவனுடைய செட்டைகளின் கீழ் பத்திரமாக இருப்பதாக போவாஸ் கண்டான். மோவாபில் இருந்த தன் குடும்பத்தின் சகல விதமான பாதுகாப்பையும் விட்டு வந்த ரூத் அதைக்காட்டிலும் மிகச் சிறந்த, பாதுகாப்பான தேவனுடைய செட்டைகளின் அடைக்கலத்தில் வந்தாள். சுயநலமற்ற அவளது செய்கைகள் நிச்சயம் பலனற்றதாய்ப் போகாது என போவாஸ் உறுதியளித்தான்.


	அன்பானவர்களே, ஆபத்து நாளில், இக்கட்டு நேரத்தில் நாமும் தேவனிடத்தில் ஓடுவோம். அவர் தமது பாதுகாப்பின் செட்டைகளை நம்மேல் விரித்து, நம்மை ஆற்றுவார். அவரது சிறகுகளின் நிழலில், வாழ்வின் கடின நேரங்களில் நாம் பயமின்றி நிற்கலாம். சீறும் புயலின் மத்தியிலும் நிலையான அவருடைய கவன விதானத்தின் கீழ் நாம் பத்திரமாயிருக்கலாம். 
நீங்கள் வேதனையான சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அவருடைய செட்டைகளின் நிழலில் வந்தடையுங்கள். அவரது அனுமதி இல்லாமல் எதுவுமே உங்களுடைய வாழ்வை அணுகாது என்ற நிச்சயத்தில் ஆறுதல் பெறுங்கள்.

ஜெபம்: ஆண்டவரே, உம் செட்டைகளின் மறைவில் நான் பத்திரமாயிருக்கிறேன்; இரவு அதிக இருளாயினும் புயல்கள் சீறினும் நான் இன்னும் உம்மேல் நம்பிக்கை கொள்வேன். நீர் என்னை மீட்டுக்கொண்டதால், நான் உம் பிள்ளையானபடியால் பத்திரமாக வைத்திருப்பீர். எனவே நான் அமைதியுடன் இளைப்பாறுவேன். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page