திங்கள், மார்ச் 10 || விலையேறப்பெற்ற பாவ மன்னிப்பு
- Honey Drops for Every Soul
- Mar 10
- 1 min read
வாசிக்க: லேவியராகமம் 14: 1-7
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; .. - சங்கீதம் 51:7
யூதர்கள் பலவிதமான சுத்திகரிப்புக்காக, ஈசோப்பு என்ற சிறிய செடியைப் பயன்படுத்தி இரத்தத்தையும் தண்ணீரையும் தெளிப்பார்கள். உதாரணத்துக்கு, ஒரு குஷ்டரோகியின் வியாதி சொஸ்தமானால், ஆசாரியன் அவனைப் பரிசோதித்து அது சொஸ்தமாயிற்று என்று கண்டால், அவனை சுத்தமானவன் என்று அறிவிப்பான். சொஸ்தமானவன், சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், ஈசோப்பையும், ஒரு மண்பாண்டத்தையும் எடுத்துக்கொண்டு வருவான். (லேவியராகமம் 14:4,5) ஆசாரியன் அந்த சொஸ்தமானவனிடம் ஒரு குருவியை மண்பாண்டத்தில் இட்டு, கொல்லச் சொல்வான். பிறகு, உயிருள்ள குருவியோடுகூட கேதுருக் கட்டை மற்றும் சிவப்பு நூலையும், ஈசோப்பையும் அந்த இரத்தத்தில் ஆசாரியன் தோய்ப்பான். இரத்தத்தை எடுத்து ஏழு முறை சொஸ்தமானவன்மேல் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, அவன் சுத்தமானவன் என்று அறிவிப்பான். பின்பு உயிருள்ள குருவியை வெளியே விட்டுவிடுவான். இவைகள் எல்லாம் எதற்கான அடையாளம்? வேதவல்லுனர் வாரன் வியர்ஸ்பீ, ஆண்டவர் இயேசுவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதலை இவைகள் சுட்டிக்காண்பிக்கின்றன. ஒருநாள் ஆண்டவர் இயேசு பரலோகிலிருந்து இறங்கி, மண்பாண்டம் ஒன்றில் தம்மை வைத்தார் - அதாவது, தமக்கென ஒரு சரீரத்தை எடுத்துக்கொண்டார். சிலுவையில் மரிக்கும்படியாக, உலகத்தின் பாவங்களுக்காக தம் இரத்தத்தை சிந்தும்படியாக அப்படிச் செய்தார். ஆனாலும், அவர் மரித்தோரிலிருந்து மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்று எழுதுகிறார். ஆசாரியன் உயிருள்ள குருவியை இரத்தத்தில் தோய்த்து, வெளியே விட்டுவிடுகிறான். அப்படியே ஆண்டவர் இயேசுவும் மரித்தோரிலிருந்து எழுந்து, பரலோகம் சென்றார்; நமக்காகப் பிதாவிடம் அவர் பரிந்து பேசுகிறார். அவர் இரத்தம், நம் பாவத்தின் விலையைச் செலுத்தினதால், நாம் பாவமன்னிப்படைந்து, சுத்தமாகிறோம்!
அன்பர்களே, ஒன்றை சிந்திப்போம் - பாவமன்னிப்பு இலவசம், அதன் விலையோ அதிகம்! நமக்கு பாவமன்னிப்பு அளிக்க இயேசு மரித்தார்; உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபாரிசத்தில், இவர்கள் பாவங்களுக்காக நான் மரித்தேன் என்று நமக்காக பேசுகிறார்.
பாவத்தைக் கழுவ அவர் கொடுத்த விலை மிக அதிகம். நாம் சோதிக்கப்படும்போதெல்லாம், இதை எண்ணி, பாவத்துக்கு விலகியிருப்போம்.
ஜெபம்: அன்பின் இயேசுவே, உமது மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் பாவத்தை மேற்கொண்டு வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு அதிகாரம் தந்தீர். என்னை இரட்சிக்க நீர் கொடுத்த பெரிய விலைக்காக உமக்கு நன்றி. சற்று நான் இதைச் சிந்தித்து, பாவம் செய்ய முன்னேறாதிருக்க எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments