வாசிக்க: ரோமர் 12:1-2
பனித்துளியைப்போல பரிசுத்தமாகுங்கள்!
.... இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்... ( ரோமர் 12:2)
... உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள். (1 தீமோத்தேயு 5:22)
ஒருநாள் காலையில் அழகான ஒரு பனித்துளியை மலையுச்சியில் கண்ட சாக்கடை நீர்த்துளி ஒன்று மிகவும் வருத்தத்துடன் ஆண்டவரை நோக்கி ஜெபித்தது; ஆண்டவரே, அந்தப் பனித்துளியைப் பாருங்கள், எப்படி பரிசுத்தமாகப் பளபளக்கிறது! என்னையும் பாருங்கள், நாற்றமெடுத்த இந்த சாக்கடையின் நீர்த்துளியாக நான் எல்லோராலும் அருவருக்கப்படுகிற நிலையில் இருக்கிறேன். அந்த அழகான பனித்துளியைப்போல நான் என்றாவது மாறமுடியுமா என்றது. கர்த்தர் உடனே அதற்குப் பதிலளிப்பதுபோல சூரிய ஒளியை அந்த சாக்கடை நீரின்மேல் பிரகாசிக்கச் செய்தார். மெதுவாக சூடேறிய அந்த நீர்த்துளி நீராவியாகி மேலே எழும்பியது. தன்னிலிருந்த அசுசி நீங்கியதால், அடுத்த நாளின் காலையில் அதுவும் பளிங்குபோன்ற பனித்துளியாக மலையுச்சியில் பிரகாசித்தது.
அன்பானவர்களே, நாம் பாவமும், அழுக்கும், குப்பையுமான உலகில் வாழுகிறோம். ஒரு நபர் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டால், உலகெங்கிலும் நடக்கும் அசுத்தமான காரியங்களை எளிதில் அவரால் அணுகமுடியும். நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நல்ல கிறிஸ்தவர்களையும் இந்த அசுத்தங்கள் கறைபடுத்திவிடக்கூடும். சற்றும் இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அன்பானவர்களே, நீங்களும் ஒருவேளை அந்த சாக்கடை நீர்த்துளியைப்போல் பரிதாபமாக உணரலாம். எப்படி சூரியனின் ஒளிக்கதிர்கள் அந்த நாற்றம் வீசிய சாக்கடை நீர்த்துளியைப் பரிசுத்தமான பனித்துளியாக மாற்றியதோ அதைப்போல ஆண்டவராகிய இயேசுவின் ஒளி படும்போது நீங்களும் பரிசுத்தமாவீர்கள். சற்று உங்களை நீங்களே ஆராய்ந்துபார்த்து, உங்கள் முழங்காலில் விழுந்து அவரிடம் உங்கள் பாவங்களை மன்னிக்கும்படி கெஞ்சுங்கள்; பாவத்தின் கறைகளைக் கழுவும்படி கேளுங்கள்; உங்களைச் சோதனைக்குள் விழப்பண்ண சாத்தானுக்கு இனி ஒருபோதும் இடங்கொடுப்பதில்லை என்று தீர்மானம் பண்ணுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்க வல்லதாயிருக்கிறது. மேலும், பரிசுத்த ஆவியானவர் உங்களில் வாசமாயிருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு தமது வல்லமையைக் கொடுத்து வெற்றியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ உங்களை நடத்துவார்.
ஜெபம்: தகப்பனே, பாவத்தின் கறையினால் பொலிவிழந்துபோன நான் பரிசுத்தமாக வாழ விரும்புகிறேன். என்னைக் கறைதிறையற்றவனாக்கும்படி உமது குமாரன் இயேசுவின் இரத்தத்தினால் கழுவி சுத்திகரியும். உமது ஆவியின் வல்லமை தந்து இனியும் பாவம் செய்யாமல் வாழ உதவிடும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments