top of page

திங்கள், நவம்பர் 18 || தெளிதேன் துளிகள்

வாசிக்க:  லூக்கா 11: 5-13


நமக்கு எது சிறந்தது என்பதை தேவன்அறிந்திருக்கிறார்


உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் ... மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? - லூக்கா 11:11


நமது பிள்ளைகள் ஒரு கல்லையோ, ஒரு பாம்பையோ கேட்டால், அவர்கள் அழுது புரண்டாலும், கூக்குரலிட்டாலும் நிச்சயம் நாம் அவர்களுக்குக் கொடுக்கமாட்டோம். எந்த ஒரு தகப்பனும் தன்னுடைய சிறு குழந்தையிடம் ஒரு கூர்மையான கத்தியையோ, தோட்டா நிரப்பிய துப்பாக்கியையோ அவர்கள் எவ்வளவு கெஞ்சிக் கேட்டாலும், சத்தம் போட்டாலும் தரவே மாட்டான். ஒரு தகப்பன் கத்தியையோ துப்பாக்கியையோ கொடுத்தால், பிள்ளையை அவன் சிறிதும் நேசிக்கவில்லை என்பது வெளிப்படும். நம்முடைய பரம தகப்பனுக்கும் இது பொருந்தும். அவரது பிள்ளைகளான நாம் தேவனிடத்தில் சில காரியங்களை, அவை நமக்கு தீமை விளைவிக்கும் என்றறியாமல் கேட்கிறோம். அது ஒரு வரமாகவோ அல்லது பேர் புகழாகவோ அல்லது மனதுக்குப் பிடித்த ஒரு பொருளாகவோ இருக்கலாம். அதை நாம் அப்பமாகக் கருதி, நம் பசியைத் தீர்க்கும் என்று எண்ணலாம். ஆனால், நம் பரம தகப்பன் தரமுடியாது என்று கூறலாம். அதற்குக் காரணம் அவர் நம்மை வெறுப்பதினாலல்ல, நம்மில் அன்புகூருவதினாலேயே அப்படிக் கூறுகிறார். முடியாது என்ற தேவ பதில், நம்மேல் வைத்திருக்கும் அவருடைய அன்பை  நிச்சயமாகக் காண்பிக்கிறது! முடிவை முதலிலேயே அறிந்துள்ள அவர், நாம் கேட்பது நமக்குப் பிரயோஜனப்படாது, கேடுதான் விளைவிக்கும் என்பதால், அவருடைய அன்புநிறைந்த அனந்த ஞானத்தின்படி முடியாது என்று சொல்லிவிடுகிறார். ஜெபத்தில் நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு அவர் கொடுத்துவிட்டால், அவை நம்மைக் காயப்படுத்திவிடும். தேவன் நம்மை மிகவும் நேசிக்கிறபடியால், நம் பலவீனத்திலே, நாம் பரிதாபமாக அழுது கேட்டும்கூட, நமக்கு அவர் கொடுக்காமலிருக்கிறார்.  


நாம் கேட்ட உலகப்பிரகார பொருட்களில் பல நமக்குக் கொடுக்கப்படாமலிருப்பதைப்போல் தோன்றலாம். ஆனாலும், நம் ஜெபங்களுக்குப் பதில் வராமலில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாம் விருப்பமாய்க் கேட்ட கல்லை அல்ல, நமக்குத் தேவையான அப்பத்தை அவர் நமக்குக் கொடுக்கிறார். எது அப்பம் எது கல் என நமக்குத் தெரியாதிருப்பதால், தேவனே முடிவெடுக்கட்டும் என்று நாம் அவரிடத்தில் விட்டுவிடுவோம். 

ஜெபம்: ஆண்டவரே, நான் கேட்டதற்கு மாறாய் என் ஜெபத்துக்கு பதில் வந்தால், தேவனிடம் கேட்டதை அவர் தரவில்லை என்று குறைகூறமாட்டேன். மாறாக, எனக்குத் தேவையற்றதை நான் கேட்டேன்; தம் அனந்த ஞானத்தின்படி, எனக்கு சிறந்தது எது என்று அறிந்த பிதா அதைத் தரவில்லை என்பேன். உம்மை முழு இருதயத்தோடு நான் நம்புவதற்கு எனக்கு நீர் உதவிடும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Hozzászólások

0 csillagot kapott az 5-ből.
Még nincsenek értékelések

Értékelés hozzáadása
bottom of page