வாசிக்க: வெளிப்படுத்தின விசேஷம் 1: 1-3
வார்த்தையை வாசி, கேள், அதைக் கைக்கொள்!
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில்... வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். (யாக்கோபு 1:21)
இன்றைய வேதப்பகுதியில், தேவனால் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற தேவையான மூன்று காரியங்களைப் பார்க்கிறோம்.
முதலாவது, இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவன் பாக்கியவான் என்று வெளிப்படுத்தின விசேஷம் 1:3 கூறுகிறது. வாசிக்கிறவன் என யோவான் இங்கு குறிப்பிடுவது தேவாலயத்திலோ, சபையிலோ வெளிப்படையாக வேதவசனங்களை வாசிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தவனைத்தான். (அப்போஸ்தலர் 15:21). அச்சகங்கள் கண்டுபிடிப்பதற்கு முந்தைய காலங்களில் மிகக் குறைவான எழுத்துப் பிரதிகளே இருந்ததால் வாசிப்பவர் ஒருவர் சபைகள்தோறும் சென்று வேதவசனங்களை வாசித்து வந்தார். வேதாகமத்தை எடுத்து அதை ஒழுங்குடனும், பயபக்தியுடனும் வாசிப்பவருக்கு நிச்சயம் தேவனின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இரண்டாவது, இந்த தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் ஆசீர்வாதம் வாக்களிக்கப்படுகிறது. சபைகளுக்கு எழுதிய கடிதங்களில் பலமுறை இயேசு: ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று கூறினார். (வெளிப்படுத்தின விசேஷம் 2: 7,11,17,29). எனவே வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு திறந்த செவி தேவைப்படுகிறது.
மூன்றாவது, எழுதப்பட்டவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டு. நாம் அவரில் அன்பாயிருந்தால் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வோம். (யோவான் 14:15).
இங்கு யோவான், காலம் சமீபமாயிருக்கிறபடியால் வசனங்களைக் வாசிப்பதில், கேட்பதில், கைக்கொள்வதில் உள்ள அவசரத்தை விளக்குகிறான். அவன் இங்கு குறிப்பிடும் காலம் எது? தற்போது இருக்கும் இந்தக் கொடிய தீங்கு நாட்கள் உச்சநிலையை அடைந்து, இயேசுகிறிஸ்து ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக வெற்றியுடன் திரும்பிவரும்வரை உள்ள காலமே அது. (வெளிப்படுத்தின விசேஷம் 19: 11-16).
அன்பானவர்களே, வார்த்தையைக் கவனத்துடன் வாசியுங்கள், அதைக் கேட்டு இருதயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதை ஒதுக்கிவிடாமலும், பிறகு வாசிக்கலாம் என காலந்தாழ்த்தாமலும் இருங்கள். கர்த்தருடைய வருகையின் நாள் மிகவும் சமீபமாய் உள்ளது. வார்த்தையைப் புறக்கணிப்பவர்களுக்கு திகிலையும், கலக்கத்தையும் உண்டாக்கும் நாளாக அது இருக்கும். தாமதியாது இன்றே மனந்திரும்புங்கள்.
ஜெபம்: ஆண்டவரே, உம் வார்த்தையை கேட்பது முக்கியம். அதைவிட அதை உள்வாங்கி விசுவாசிப்பது மிக முக்கியம். நான் காலந்தாழ்த்தாமல் உமது வார்த்தையைக் கருத்தாய் வாசிக்கவும், கேட்கவும், கைக்கொள்ளவும் எனக்கு உதவும். காலம் பொல்லாததாயும், உம் வருகை சமீபமாயும் இருப்பதால் எல்லா அசுத்தங்களுக்கும் என்னை விலக்கி, உம்மை சந்திக்க ஆயத்தப்படுவேனாக. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Opmerkingen