வாசிக்க: யோவான் 4: 46-54 தெளிதேன் துளிகள்
கர்த்தரின் வார்த்தையை நம்பும்போது வரும் ஆசீர்வாதம
...அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். - யோவான் 4:50
கலிலேயாவிலே இயேசு செய்த இரண்டாம் அற்புதம், ராஜாவின் மனுஷனுடைய குமாரனைக் குணமாக்கியது. தன் வீட்டுக்கு இயேசு வந்து, மரணப்படுக்கையிலிருந்த தன் குமாரனைக் குணமாக்கவேண்டும் என்று துரிதப்படுத்தினான் ராஜாவின் மனுஷன். தான் கேள்விப்பட்ட யூதேயாவிலே இயேசு செய்த அற்புதங்கள் அடையாளங்களில் அவனுடைய விசுவாசம் இருந்தது. (யோவான் 4:47) ஆனால், ராஜாவின் மனுஷனோடு கப்பர்நகூம் போகவில்லை இயேசு. உன் மகன் பிழைத்திருக்கிறான் என்ற தம் வார்த்தையோடு அவனை அனுப்பிவிட்டார். தம் வார்த்தைகளால் அவனது விசுவாசத்திலே தடுமாற்றத்தை ஏற்படுத்தினார் இயேசு. அந்தத் தகப்பன் அவரை அழைத்துச் செல்லாமல்
கப்பர்நகூமுக்குப் போக மறுத்தால், இயேசுவின் வார்த்தையை நம்பவில்லை என்பதை வெளிப்படுத்தி, அவிசுவாசத்தால், வரும் பலனை இழந்திருப்பான். அல்லது, இயேசுவின் கட்டளைப்படி செய்திருந்தும், குமாரன் பிழைப்பான் என்ற வெளிப்புற உத்தரவாதம் இல்லாமல் வீட்டுக்குச் சென்றிருப்பான். ஒரு கடினமான முடிவை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு இருந்தது உத்தரவாதத்தைக் கேட்டு அவன் தன் அவிசுவாசத்தைக் காட்டியிருக்கலாம் அல்லது ஊக்கமளிக்கும் எந்தவித வெளிப்புற நிரூபணமின்றி தன் விசுவாசத்தை அவன் வெளிப்படுத்தியிருக்கலாம். ராஜாவின் மனுஷன் இந்த இரண்டாம் முடிவை எடுத்தான்! இயேசுவின் வார்த்தையில் தனக்கிருந்த உடனடி விசுவாசத்தைக் காட்டினான். இயேசு சொன்ன வார்த்தையை நம்பி அவன் திரும்பிப் போனான்! எந்த மறுப்புமின்றி விசுவாசத்துடன் எளிதில் கீழ்ப்படிந்தான். தனது, அற்புதங்களை எதிர்பார்த்த தன் கீழ் நிலை விசுவாசத்திலிருந்து, இயேசுவின் வார்த்தையில் மட்டுமே நம்பிக்கை வைக்கின்ற உயர் நிலை விசுவாசத்துக்கு உயர்த்தப்பட்டான்!
அன்பர்களே, நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் விசுவாசத்துக்கு இது ஒரு நல்ல உதாரணம். தேவனுடைய வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைத்து, தனக்கு உரிமையாக்கிக் கொள்வதே உண்மையான ஆவிக்குரிய ஆசீர்வாதத்தின் ஆதாரம்! இத்தகைய எதிர்பார்ப்பின் விசுவாசம் நமக்கு வேண்டும். யாக்கோபு 1:7, ஒருவன் விசுவாசத்தோடு ஜெபித்தாலும் சந்தேகப்பட்டால், தேவனிடமிருந்து எதையாகிலும் பெறலாமென்று நினைக்கமுடியாது என்று சொல்கிறது. ஆனால் விசுவாசத்துடன் கேட்டால் பெற்றுக்கொள்வோம். (யோவான் 16:24)
ஜெபம்: ஆண்டவரே, என் இன்னல்களில், நீர் என்னுடன் வந்து, உம் அன்பும் கரிசனையும் என்மேல் உள்ளது என்ற வெளிப்படையான அடையாளத்தைத் தர விரும்புகிறேன். ஆனால், உம் வார்த்தையே போதும்; வார்த்தையை நிறைவேற்ற நீர் அதை உண்மையாய் செயல்படுத்துவீர் என நான் நம்புகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios