வாசிக்க: சங்கீதம் 90: 1-12
உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்
நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். - சங்கீதம் 90:12
இந்த சங்கீதமானது மனுஷனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவைக்குறித்த பெரிய உறுதிமொழியோடு துவங்குகிறது. தேவரீர் என்றும் அநாதி தேவன் என்றும் இந்த சங்கீதத்தை எழுதிய மோசே அவரை அழைத்து, தலைமுறைகள் தோன்றும் முன்னரே, எதுவும் தோன்றாதிருந்தபோதே சதாகாலமும் அவர் தேவனாய் இருந்தார், இன்றும் இருக்கிறார், இனியும் இருப்பார் என்று உறுதிபடக் கூறினான். சகலத்தையும் உருவாக்குமுன்னரே சதாகாலமும் தேவனாயிருப்பவர் அவர். தேவன் நித்தியமானவர் காலத்துக்கு அப்பாற்பட்டவர், முதலும் முடிவுமானவர் என்று அறிமுகப்படுத்திய மோசே, அவர் நித்திய தேவன்; மனுஷருக்கு ஆயிரம் வருடம் மிக அதிகமாகத் தோன்றும்போது, தேவனுக்கு முன் அது மிகவும் கொஞ்சமே என்று கூறுகிறான். பிறகு, மோசே தேவனுடைய நித்தியத்துவத்தை மனுஷரின் சொற்ப வாழ்வுக்கு மற்றும் அவர்களது பலவீனத்துக்கு ஒப்பிட்டுப் பேசுகிறான். நம் ஆயுசுநாட்கள் மிகவும் சொற்பம். சங்கீதக்காரனின் கூற்றுப்படி அவை 70 வயதாயிருக்கலாம் அல்லது பெலத்தின் மிகுதியால் 80 வயதாயிருக்கலாம்; சிலர் அதைக் காட்டிலும் அதிக வருடங்கள் வாழலாம். எனவே, நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான விண்ணப்பம் - எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும் என்பதே. இந்த ஜெபத்தில் நாம் தாழ்மையைப் பார்க்கிறோம்; எப்படி இதைச் செய்வது என்று தேவன் நமக்குப் போதிக்கவேண்டும் என்ற உணர்தல் நமக்கு இருக்கவேண்டும்! அவரது உதவி நமக்கு அவசியம்! அதற்கான விண்ணப்பம் நமக்கு மிக முக்கியமானது; அப்போதுதான் நாம் அகங்காரமின்றி, ஆண்டவர் கரத்திலிருக்கும் நம் வாழ்க்கையில் அவரை மீறுகின்ற நம் சுய திட்டங்களைப் போடாதிருப்போம்!
அன்பானவர்களே, ஒரு புதிய ஆண்டுக்குள் பிரேவேசிக்க இருக்கின்ற நாம், நம்மை ஆராய்ந்து பார்ப்போம். மேற்கண்ட சத்தியத்தை நம் மனதில் இருத்தி, வரும் ஆண்டில் வித்தியாசமாக வாழ்வோம். இந்த சத்தியத்தைப்பற்றிய அறிவு ஞானமுள்ள இருதயத்தைப் பெற நமக்கு உதவுவதால் - பிறரை மன்னிக்க துரிதப்படுவோம், தைரியமாகச் சுவிசேஷம் சொல்வோம், கொடுப்பதில் உதாரத்துவமாவோம், சுயத்தை முக்கியப்படுத்த மாட்டோம். ஆனால், சிலுவை சுமக்க ஆர்வமாயிருந்து, எல்லாருக்கும் அன்பினால் சேவை செய்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, இந்த ஆண்டை முடிக்க உதவின உம் கிருபைக்காக உமக்கு என் நன்றி. புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க இருக்கும் எனக்கு ஆயுசுநாட்களை எண்ணும் அறிவைத் தாரும். ஆணவமாய், சுயத்தை மையமாக்காமல் உம்மை நம்பி முழுமனதுடன் உமக்கு ஊழியம் செய்வேன். ஒவ்வொரு நொடியிலும் நீர் என்னை ஆளுகை செய்ய முழுவதுமாய் என்னை ஒப்படைக்கிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments