வாசிக்க: லூக்கா 2: 8-20
கிறிஸ்துமஸ் நற்செய்தியை முதலில் கேட்டது மேய்ப்பர்களே
... மேய்ப்பர்கள் .. இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான்... - லூக்கா 2:8,9
இரட்சகர் பிறந்தார் என்ற நற்செய்தியானது முதலாவது மேய்ப்பர்களுக்குத்தான் வந்தது. அவர்கள், கல்வி கற்காதவர்களும், திறமையற்றவர்களுமாய் இருந்தனர்; சமுதாய ஏணியிலே கீழ்மட்டத்தில் அவர்கள் இருந்தனர். ஆடுகளுக்கு வாரத்தின் ஏழு நாட்களிலும் கவனம் தேவையாயிருந்ததினால் பரிசேயர்களால் உருவாக்கப்பட்ட ஓய்வுநாள் பிரமாணங்களைக் அவர்களால் கைக்கொள்ள முடியவில்லை. அதன் விளைவு - அவற்றைக் கடைபிடிக்க முடியாமல் போனதால் அவர்கள் தீட்டுப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். கென்ட் ஹயுஸ், யூத சரித்திரத்தின் அந்தக் காலக்கட்டத்தில் மேய்ப்பர்களைவிடக் கீழ்நிலையில் இருந்தவர்கள் குஷ்டரோகிகள் மட்டுமே என்று எழுதுகிறார். மேய்ப்பது தனிமையிலே செய்யப்படும் தொழிலாயிருந்தது; அதுவும் இராத்திரியிலே ஒரு மேய்ப்பன் காவலாளியாய் நிற்க வேண்டும்; ஆடுகள் விழித்து எழுந்து, அலைந்துபோகாமல் காக்க வேண்டும், இரைதேடி வரும் மிருகங்கள் அவற்றைத் தாக்கி விழுங்காதபடி காத்துக்கொள்ள வேண்டும். இயேசு பிறப்பின் செய்தியை தூதன் சொல்லுவதற்கு மேய்ப்பர்கள் எதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்டார்கள் என்ற கேள்வி நமக்குள் எழும்பும். அதற்கான தெளிவான பதில் - தேவன் மேய்ப்பர்களைத் தெரிந்துகொண்டதின் காரணம், நற்செய்தி எளியவர்களுக்கே உரியது, உயர்தர வாழ்விலிருப்பவர்களுக்கல்ல என்பதே. இந்த மேய்ப்பர்கள், தேவகிருபையின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, அதை மகிழ்ச்சியோடு பிறருக்கு அறிவிக்கின்ற தாழ்மையான சாதாரண ஜனங்களைக் காண்பிக்கிறவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் படிப்பறிவற்வர்கள்தான், ஆனால், அவர்களுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்த அது தடையாக இருக்கவில்லை!
அன்பானவர்களே, சமுதாயத்தால் மிக எளிமையான சாதாரண மக்களாய் கருதப்படுபவர்களாய் நாம் இருக்கலாம்; ஆனால், நாம் இருக்கிறவண்ணமாகவே நம்மை இயேசு நேசிக்கிறார் என்பதுதான் உற்சாகமூட்டும் செய்தி! நாம் சற்றும் எதிர்பாராத சமயங்களில் அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்தி, அவரது நற்செய்தியை உடைந்துபோன உலகுக்கு எடுத்துச் செல்லுகின்ற மக்களாக நம்மை அனுப்புகிறார்.
ஜெபம்: ஆண்டவரே, இயேசுவின் பிறப்பின் நற்செய்தியை, சமுதாயத்தால் தள்ளப்பட்ட மேய்ப்பர்களுக்குச் சொல்ல தூதர்களை நீர் அனுப்பினீர். எனக்கு படிப்போ, அந்தஸ்தோ இல்லை; ஆனால் கிருபையாக என்னைத் தெரிந்தெடுத்து மரிக்கும் உலகுக்கு நம்பிக்கையின் செய்தி சொல்ல அனுப்பினீர். நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments