வாசிக்க: சங்கீதம் 107:4-9
ஜெபக் கைபேசியைப் பயன்படுத்துங்கள்!
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். - சங்கீதம் 145:18
ரொனால்ட் கைப்பேசிகளை ஒருபோதும் விரும்புவதில்லை. தன் மனைவி தனக்கு அன்பளிப்பாய் கொடுத்திருந்த கைப்பேசியையும் அவன் பயன்படுத்துவதில்லை. அவன் ஒருநாள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, அவனது காரின் டயர் வெடித்துவிட்டது. அவனிடத்தில் வேறு ஸ்டெப்னியும் இல்லை. அங்கே தனியாக அமர்ந்து, கார் பழுது பார்க்கும் இடத்திற்கு போன் செய்தான். சாலையோர உதவியாளர்கள் விரைந்து வந்து சில நிமிடங்களில் காரை சரிசெய்தனர். ஜெபம் என்பது விரைவு அழைப்பில் (Speed Dial) கர்த்தரின் எண்ணைக் கொண்ட கைப்பேசி போன்றது. அவருடனான நம் உறவை ரீசார்ஜ் செய்வதற்கு, மொபைல் சார்ஜர் தேவையில்லை. கர்த்தாவே என்றும் சொல்லும் தருணத்தில், அவர் நமக்கு செவிசாய்த்து பதிலளிப்பார். எரேமியா 33:3ல், என்னை நோக்கிக் கூப்பிடு; அப்போது நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். சங்கீதம் 50:15, ஆபத்து நாளில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன். நீ என்னை மகிமைப்படுத்துவாய் என்று கூறுகிறது. அவரை நாம் நோக்கிக் கூப்பிட்டால் அவர் நிச்சயம் பதில் உத்தரவு அருளிச் செய்வார்.
அன்பு நண்பர்களே, இப்படிப்பட்ட ஒரு வல்லமையான கருவியான ஜெபம் எனும் கைப்பேசியை நாம் கையில் வைத்துக்கொண்டு இருந்தாலும் அதை நாம் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை, அதுவும் சில நிமிடங்கள் அல்லது நில விநாடிகள் அதைப் பயன்படுத்திவிட்டு நாளெல்லாம் சும்மா வைத்திருந்தால் என்ன பிரயோஜனம்? சற்று யோசிப்போம். இன்றைக்கு இளைஞர்கள் பெரியவர்கள் யாராயிருந்தாலும் தங்களிடம் உள்ள செல்ஃபோன்களை எப்போது பார்த்தாலும் தங்கள் காதுகளில் வைத்துக் கொண்டு யாரிடமாவது பேசிக்கொண்டு திரிவதை நாம் காண்கிறோமே, நம் கர்த்தரோடு பேச நாம் ஏன் தயங்குகிறோம்? அவர் அழைத்தாலும் சரி, அவரை நாம் அழைத்தாலும் சரி, அவருடன் பேசும் நேரம் அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும். அப்போது அவர் நமக்கு ஆலோசனை சொல்லி அருமையாக நம்மை நடத்துவார். நாம் மகிழ்ச்சியாக இருப்போம்.
ஜெபம்: கர்த்தாவே, ஜெபம் எனும் வல்லமையான கருவி என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தும் அதை நான் சரியாக உபயோகிக்காததற்காக வருந்துகிறேன். இனியாவது, உம்முடன் எப்போதும் ஜெபத் தொடர்பிலிருக்க, உம்மிடமிருந்து ஆலோசனை பெற, மகிழ்ச்சியாக வாழ கிருபை தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments