வாசிக்க: 2 நாளாகமம் 7:17-22
வாக்குத்தத்தங்களுக்கு நிபந்தனை உண்டா?
... அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக.- உபாகமம் 13:4
வேதாகமத்தில் காணும் வாக்குத்தத்தங்களில் பெரும்பாலானவை நிபந்தனையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. 2 நாளாகமம் 7:14ல், தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர், சில கட்டளைகளை நிறைவேற்றினால், தேசத்தை ஆசீர்வதிப்பதாக கர்த்தர், சாலொமோனிடம் கூறினார். முதலில் தம் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தவேண்டும் என்று கர்த்தர் கூறுகிறார். கர்த்தர் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்துநிற்கிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். பெருமையும் அகந்தையும் கர்த்தரால் வெறுக்கப்படுபவை! இரண்டாவதாக, கர்த்தர் தம் ஜனங்கள் தமது முகத்தைத் தேடி ஜெபம் பண்ணவேண்டுமென விரும்புகிறார். சங்கீதம் 27:4ல், கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன். நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் என்று தாவீது கூறுகிறார். அந்நாட்களில் ராஜாக்கள் பிரதானமாய்ச் செய்கின்ற இரண்டு காரியங்கள் - ஒன்று தங்கள் ராஜ்யத்தின் எல்லையை விரிவாக்குவது; இரண்டு, தங்களது பொருளைப் பெருக்குவது. ஆனால் தாவீதோ இவற்றைக் கேட்காமல், தன்னைச் சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருந்தபோதும், தேவனுடைய ஆலயத்தில் தங்கியிருந்து அவர் முகத்தைத் தேடுவதையே வாஞ்சித்தது அதிசயமல்லவா! மூன்றாவதாக, தங்களது பொல்லாத வழிகளைவிட்டு தமது ஜனங்கள் திரும்பவேண்டுமென்று கர்த்தர் கட்டளையிடுகிறார். தமது ஜனங்கள் அப்படிச் செய்யாவிட்டால் அவர் துக்கப்படுகிறார். அவர்கள் மனம்திரும்பி அவரிடத்தில் வந்தால் அவர்களை அவர் அதிகமாய் ஆசீர்வதிக்கிறார்.
அன்பானவர்களே, இன்றைய தியானம் நமக்குக் கற்றுக்கொடுப்பது, நாம் தாழ்மையுள்ள இருதயத்துடன், நமது பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, ஆண்டவரை நேசித்துத் தேடி, அவர் விரும்புகிற விதத்தில் வாழ்வோமானால் அவரது ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்துக்கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, என்னிஷ்டப்படி வாழ்ந்தாலும் உமது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என நினத்திருந்தேன். ஆனால், உமது வார்த்தையின்படி நடந்து, உம்மை மகிழ்வித்து உம்மை மகிமைப்படுத்தி, உம்மிடம் கேட்கும்போது நீர் என்னை ஆசீர்வதிக்கிறீர் என இன்று புரிந்துகொண்டேன். நன்றி. ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments