திங்கள், ஜனவரி 27 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 27
- 1 min read
ஜெபமின்றி எழுப்புதலில்லை!
உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? - சங்கீதம் 85:6
மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் எழுப்புதலே பிரதானமானதும், சிறந்ததும், மகிமையுள்ளதுமாக இருக்கிறது என்று திரு செல்வின் ஹ்யூக்ஸ் அவர்கள் கூறுகிறார். பழைய ஏற்பாட்டில், எழுப்புதல் என்ற வார்த்தை உயிர்ப்பித்தல் என்ற அர்த்தத்திலே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பொருள் தான் முன்னிருந்த உன்னத நிலைக்குத் திரும்புவதுதான் எழுப்புதலாகும். இந்த எழுப்புதல் கர்த்தருடைய கரங்களால் செய்யப்படுவதாயிருக்கிறது. நற்செய்தி அறிவிப்பது, ஆலோசனை தருவது, பிரசங்கிப்பது, போதிப்பது போன்ற காரியங்கள் மனுஷர் கர்த்தருக்காக செய்யும் காரியங்கள். எழுப்புதலோ கர்த்தர் மனுஷருக்காக செய்யும் காரியம். ஆனால், இந்த எழுப்புதலை பரலோகத்திலிருந்து பூமிக்குக் கொண்டுவர விசுவாசமும் ஊக்கமும் நிறைந்த ஜெபம் மிகவும் அவசியம். எழுப்புதல் ஏற்படவேண்டுமானால் ஆண்டவரது ராஜரீகமும் மனிதனுடைய பொறுப்பு ஆகிய இரண்டு காரியங்கள் ஒன்றாக செயல்படவேண்டும். எனவேதான், எழுப்புதலை அனுப்ப நினைக்கும்போதெல்லாம் தன்னிச்சையாக செயல்படாமல், தம் மக்களின் ஜெபத்தைக்கொண்டே அதை செயல்படுத்துகிறார் கர்த்தர். அதற்காகவே, தாம் தெரிந்துகொள்ளும் தேவஜனங்களின் இருதயங்களில் ஜெப ஆவியை ஊற்றி, அதன் விளைவாக தமது இரட்சிப்பின் மேன்மையை அநேகம் ஆயிரமான மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை உயிர்ப்பிக்கிறார் நமது ஆண்டவர்.
அன்பானவர்களே, ஒரு சடிதியான நிகழ்வாகவும் இருக்கிறது. அதாவது அது எந்தவித முன்னறிவிப்புமின்றி தொடங்கிவிடுகிறது. அப்போஸ்தலர் 2:2ல், பலத்த காற்றின் சத்தத்தைப்போல சடிதியாய் ஒரு முழக்கம் வானத்திலிருந்து உண்டானது என்று வாசிக்கிறோம். அதைப்போன்றே வேல்ஸ் தேசத்திலும் மற்ற இடங்களிலும் எழுப்புதல் ஏற்பட்டபோது அது திடீரெனத்தான் ஏற்பட்டது. மேலும், எழுப்புதலானது, எதிர்பாராத இடங்களில் தொடங்குகிறது. உதாரணமாக, அப்போஸ்தலர் கால எழுப்புதல் மகிமையான ஆலயப் பிரகாரங்களில் தொடங்கவில்லை. மாறாக, மிகச் சிலர் கூடி ஜெபித்துக்கொண்டிருந்த முக்கியத்துவம் பெற்றிராத ஒரு மேல்வீட்டறையிலேயே ஆரம்பித்தது. டச்சு தொழிலதிபர் ஜெரேமியா லான்ஃபயர், தனது அலுவலகத்தில் எழுப்புதலுக்காக தன் சகாக்களோடு ஜெபித்தபோது, ஆறு மாதங்களுக்குள்ளாக அந்த ஊரில் பெரிய எழுப்புதல் உண்டாகி, இலட்சத்துக்கும் அதிகமான தொழிலதிபர்கள் ஆங்காங்கே நடந்த ஜெபக்கூட்டங்களுக்கு ஓடிவர ஆரம்பித்தனர்.
ஜெபம்: பிதாவே, என் ஊரிலும் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். ஜெபஆவியை எங்கள் உள்ளங்களிலே ஊற்றும். நாங்கள் ஊக்கத்துடன் விடாப்பிடியாக ஜெபித்து உமது ராஜரீக செயலான எழுப்புதலை எங்கள் ஊருக்குக் கொண்டுவர எங்களைப் பயன்படுத்தும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentarios