திங்கள், ஜனவரி 20 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Jan 20
- 1 min read
தேவனின் வீடு பெத்தேல்!
யாக்கோபு ... விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். (ஆதியாகமம் 28:16)
தன் தகப்பன் ஈசாக்கிடமிருந்து தந்திரமாக ஆசீர்வாதங்களைப் பெற்று யாக்கோபு வீட்டைவிட்டு ஓடியபோது, வழியிலே ராத்தங்கின இடத்திலே முதன்முறையாக தன் தேவனை நேராகத் தெரிந்துகொள்ள வாய்ப்பு அவனுக்குக் கிடத்தது. தனிமையில் விடப்பட்டு கல்லில் தலையை வைத்துத் தூங்கியபோது, வானத்துக்கும் பூமிக்குமாக வைக்கப்பட்டிருந்த ஏணியையும், அதில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் தூதர்களையும் அவன் கண்டான். சொல்லப்போனால், அன்றுதான் ஆண்டவர் அவனோடு நேரடியாக இடைபட ஆரம்பித்தார்.
அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவரை நேரடியாக சந்தித்த அனுபவத்திற்குள்ளாக வந்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவராயிருக்கலாம். ஆனால், நீங்கள் கர்த்தருடன் நேரடித் தொடர்பில் இருக்கிறீர்களா என்பது முக்கியம். யாக்கோபு பெற்ற தரிசனத்தின் மூன்று முக்கிய அம்சங்கள் - முதலாவது, ஆண்டவரிடத்தில் ஒரு நெருக்கம்; இரண்டாவது, அவரோடு பேசமுடியும் என்ற வெளிப்பாடு. மூன்றாவது, மற்ற இரண்டைக் காட்டிலும் - தன்னைக் கர்த்தர் அங்கீகரித்துக்கொண்டார் என்ற மேலான உணர்வு! தனது தகப்பன் மற்றும் சகோதரனை ஏமாற்றியதால் உண்டான குற்றவுணர்வு யாக்கோபை அதிகமாக உறுத்திக்கொண்டிருந்த வேளையில், தேவன் தன்னை முற்றுமாகக் கைவிட்டுவிடவில்லை என்று அவன் அறிந்தபோது அவனுக்குள் நம்பிக்கை துளிர்த்தது. அந்த இடத்திற்கு, அவன் பெத்தேல் என்று பெயரிட்டான்.
தேவனுடைய வீடு என்றும் வானத்தின் வாசல் என்றும் அதற்கு அர்த்தம். யாக்கோபு அங்கே ஒரு தூணை நிறுத்தி அதின்மேல் எண்ணை வார்த்து இந்தப் பெயரை சூட்டி, இரண்டு பொருத்தனைகளைச் செய்தான். ஒன்று, கர்த்தரே தனக்குத் தெய்வமாக இருப்பார் என்றும், இரண்டு, தான் பெற்றுக்கொள்வது எல்லாவற்றிலும் அவருக்குத் தசமபாகம் கொடுப்பேன் என்றும் பொருத்தனை செய்தான். இந்த புதிய ஆண்டில் நமக்கென்று பெத்தேல் ஒன்றை உண்டாக்கி, அவரோடு தனிமையில் உறவாடி, நம் நன்றியைத் தெரிவித்து, நம்மையும் நம்முடையவைகளையும் அர்ப்பணிப்போம்.
ஜெபம்: தகப்பனே, எனக்கும் ஒரு பெத்தேல் தேவையென்று நான் உணர்கிறேன். உம்மோடு தொடர்புகொள்ளவும், உமக்கு எனது நன்றியைத் தெரிவிக்கவும், உம்மை மகிமைப்படுத்தவும், காணிக்கைகளைச் செலுத்தவும், அங்கு நான் அடிக்கடி வந்து உம்முடன் உறவாடவும் எனக்கு கிருபை தாரும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Opmerkingen