top of page

திங்கள், ஏப்ரல் 21 || இரகசிய வருகை மகத்தானது!


வாசிக்க: மத்தேயு 24: 32-34


...நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்ப(டுவோம்)... - 1 தெசலோனிக்கேயர் 4:17



கடைசி காலங்களின் காலண்டரில் அடுத்த முக்கிய நிகழ்வு ஆண்டவரின் இரகசிய வருகையே! ஆங்கிலத்தில் ராப்ச்சர் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் இயேசு மத்தியவானத்தில் வருவார்; விசுவாசிகள் அங்கே அவரைச் சந்திக்கும்படிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மரித்தோரில் கிறிஸ்துவுக்குள் மரித்த விசுவாசிகள் மட்டும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், மறுரூபமாக்கப்படுவார்கள். ஏனெனில் 1 தெசலோனிக்கேயர் 4:16,17ன்படி, கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனின் சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, இந்த இரகசிய வருகை எப்போது வேண்டுமானாலும் நடக்கும் - இந்த தியானத்தை வாசிக்கும் இன்றேகூட நடக்கலாம். எனவேதான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பல உவமைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளை சொல்லி தம் சீஷர்களை எச்சரித்தார். மூன்றாவதாக, கோபாக்கினை பூமியின்மேல் ஊற்றப்படுவதற்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்தேறும். அவிசுவாசிகளுக்கு அந்தகாரத்தின் நாளாகவும் அதே சமயம் விசுவாசிகளுக்கு விடுதலையின் நாளாகவும் இருக்கும். நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்தில் இந்த வருகைக்கான அடையாளங்கள் - பஞ்சங்கள், பூமியதிர்வுகள், வானத்தின் அடையாளங்கள், கலாச்சாரச் சீரழிவு போன்றவை- அதிகரித்துக்கொண்டே இருப்பதைக் காணும்போது எப்போது வேண்டுமானாலும் இரகசிய வருகை இருக்கலாம் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த நிகழ்வின்போது பரிசுத்த ஆவியானவரும், அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி துவங்குவதற்கு ஏதுவாக, இந்த உலகத்தைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவார். 


அன்பானவர்களே, விசுவாசிகளாயிருக்கும் நாம் அனைவருமே இந்த மகிமையான நிகழ்வை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களாக இருக்கவேண்டும். அதற்கு நம்மைக் கர்த்தரின் பார்வையில் தகுதியாக்கிக்கொண்டால், மத்திய வானில் இயேசுவைச் சந்திக்கும் சிலாக்கியத்தை நிச்சயம் அவர் நமக்கு அருளுவார்.   

ஜெபம்: தேவனே, உமது ரகசிய வருகைக்கு என்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள எனக்கு கிருபை தாரும். உமது வருகையில் நான் விட்டுவிடப்படாதபடிக்கு இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரியும், பரிசுத்தமாய் வாழ உம் ஆவியால் நிரப்பும். தினமும் கறைதிறையற்று ஜீவிக்க என்னைப் பலப்படுத்தும்.  ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page