top of page

திங்கள், ஏப்ரல் 14 || இயேசுவின் இரத்தம் மட்டுமே நம்மை நீதிமானாக்கும்


வாசிக்க: ஏசாயா 64: 5-9


... அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். - 1 யோவான் 1:7



ஏசாயா 64:6, தேவனுடைய பார்வையில், நமது நீதிகள் எல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது என்று கூறுகிறது. இந்த உதாரணம் அதை நன்றாய் விளங்கப் பண்ணும் - உங்களது மிகச் சிறந்த உடையைச் சேற்றில் போட்டு இழுக்கிறீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். பின்னர் நீங்கள் அதை உடுத்திக்கொண்டு பட்டணத்தின் மிகச் சிறந்த உணவகத்துக்குச் செல்கிறீர்கள் என்றால், உணவகத்தின் நுழைவாயிலிலேயே உங்களைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்! நமது சுயநீதியின் கிரியைகளுடன் நாம் தேவன்முன் நின்றால், தேவனும் இப்படித்தான் உணருவார். நம்முடைய சுயநீதி நமக்கு அழகாகத் தோன்றினாலும், அவரது கண்களில் அவை அழுக்கு நிறைந்த உடையாகவே தோன்றும்!


அன்பானவர்களே, தேவனுடைய பார்வையில் நீதிமானாய் காணப்படுதல் என்பதன் அர்த்தம் என்ன? நமது பாவத்தில் தொலைந்துபோயிருக்கும் நமக்கு, பாவத்தின் அளவு இன்னதென்று தெரியாது. நம் ஆத்துமாவை நாம் ஆராயும்போது மேலோட்டமாயுள்ள பாவம்தான் நமக்குத் தெரியும். ஆனால், தேவன் நம்மைப் பார்க்கையில், நம் பாவங்களைக் காண்பார் - பாவங்களை மட்டுமே! நாம் நீதி என்று சொல்வதை அழுக்கான கந்தை என்று அவர் சொல்கிறார். ஆனால், நமக்காக சிலுவையில் அறையப்பட்ட தேவாட்டுக்குட்டி இயேசுவின்மேல் நம்பிக்கை வைத்து, அவர் இரத்தத்தால் நாம் கழுவப்படும்போது, தேவன் பரலோகிலிருந்து பார்க்கும்போது, கறைதிறையற்றவர்களாகவும் நீதிமான்களாவும் நம்மைக் காண்கிறார்! ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஏற்படுகிற மிகப்பெரிய மாற்றத்துக்கான அடிப்படை இது மட்டுமே! தேவாட்டுக்குட்டியின் ஜீவனை நமக்குத் தேவன் கொடுத்துவிட்டதால், இன்றைக்கு நமக்கு இயேசுகிறிஸ்துவின் ஜீவனில் பங்கு உண்டு! இந்தவித உயர்ந்த ஆசீர்வாதம் நமக்கு எப்படி வருகிறது? நாம் செய்கின்ற எந்தவிதக் கிரியையினால் அல்ல, சிலுவையிலறையப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியின்மேல் நாம் வைக்கின்ற விசுவாசத்தினாலே மட்டுமே அதைப் பெற்றுக்கொள்கிறோம். 
ஜெபம்:  ஆண்டவரே, நன்மையானதை, சரியானதை செய்வதால் நான் நீதிமான் என்று எண்ணுகிறேன். என் ஆத்துமாவிலுள்ள பாவத்தின் ஆழத்தை என்னால் காணமுடியாது. ஆனால், நீர் என்னைக் காண்கையில் என் எல்லா பாவங்களைப் பார்க்கிறீர். என் நீதி உமக்கு அழுக்கான கந்தையாய் இருக்கிறது. எனவே, உம் சிலுவையண்டை நான் பணிவுடன் வருகிறேன். தேவாட்டுக்குட்டியின் இரத்தத்தால் என்னைக் கழுவி உம் நீதியை எனக்குத் தரிப்பியும். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page