திங்கள், ஏப்ரல் 07 || நம் காலங்கள் கர்த்தரின் கரத்திலிருக்கிறது
- Honey Drops for Every Soul
- 3 days ago
- 2 min read
வாசிக்க: எபேசியர் 5: 15-17
நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. யோவான் 4:34
நேரம் நமக்குக் கொடுக்கப்பட்ட ஈவாய் இருக்கிறது. நேரத்தை நம்மால் உருவாக்க முடியாது. அதை ஏற்றுக்கொண்டு, உண்மையுள்ள உக்கிராணக்காரராகப் பயன்படுத்தவேண்டும். இயேசுவின் வாழ்க்கையை நாம் சற்று யோசித்துப் பார்ப்போம். அவருக்கு இருந்த அழுத்தம் மிகவும் பெரிது - அற்புதத்தைத் தேடி அவருக்குப் பின் திரளான ஜனங்கள் சென்றனர், அநேக கேள்விகளை எழுப்பின ஜனங்களும் இருந்தனர், அவர் அநேகக் காரியங்களைச் செய்யவேண்டியிருந்தது. ஆனால், எல்லாரும் எதிர்பார்த்தபடி அவர் எல்லாவற்றையும் செய்யவில்லை. அவர் வாழ்விலே அவர் கொண்டிருந்த ஒரே விதிமுறை, தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதுதான். ஒரு மனுஷனாக அவருக்கு மனுஷீக தட்டுப்பாடுகள் இருந்தன - ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டுமே அவர் இருக்கமுடியும். ஆனால் அதிலும்கூட, தம் பிதாவைப் பிரியப்படுத்தும் காரியங்களை மட்டும் செய்து, பிதா தந்த பணியைச் செய்து முடித்தார் அவர். (யோவான் 8:29, 17:4)
அன்பானவர்களே, நமக்கு ஒரு பாடம் இங்கே உண்டு! நாம் தினமும் ஜெபிக்கவேண்டிய ஜெபம், ஆண்டவரே, எது உம் வேலை எது உம் வேலையல்ல என்று அறியும் வரத்தை எனக்குத் தாரும் என்பதே. தினந்தோறும் வரும் சவால்களைக் குறித்து, ஆண்டவரே, எதற்கு நான் ஆம் என்று, எதற்கு இல்லை என்று சொல்லவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஞானத்தைத் தாரும் என்று நாம் சொல்லுவோம். ஆனால், நாம் பீதியும், சோர்வும், கலக்கமும் அடையக்கூடாது என்று தேவன் விரும்புகிறார். அவர் மத்தேயு 11:2829ல், வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்... என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் ... என்கிறார். ஆனால், நாம் தாழ்மையுடன் நம் பாரங்களை அவரிடத்தில் கொடுப்பதில்லை. கர்த்தர் வைத்திருக்கும் பட்டியலில், நாம் வருத்தப்பட வேண்டும் என்பது இல்லவே இல்லை! வருத்தமானது கனியற்ற காரியம். நமக்கு இந்த நிமிடத்தைக் கர்த்தரே தந்திருக்கிறார். எனவே, நாம் நாளைய காரியங்களைக் குறித்து கவலைப்பட்டு, கர்த்தர் நமக்குத் தற்போது கொடுத்திருக்கும் காரியங்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. கர்த்தர் பாதத்தருகில் அமர்ந்து அவர் சித்தத்தை அறிவதற்கு நாம் முன்னுரிமை தரவேண்டும். பிறரோடு நாம் அதிக நேரம் செலவிடலாம், நற்காரியங்கள் செய்யலாம், இன்னும் பலவற்றைச் செய்யலாம், ஆனால் தினமும் தேவனோடு செலவிட தகுதியுள்ள நேரத்தைத் தருகிறோமா? நமது நேரங்கள் நம் கரங்களிலல்ல, அவரது கரங்களிலே இருக்கட்டும்!
ஜெபம்: ஆண்டவரே, பிறருடன் நான் அதிக நேரம் செலவிடும் நான், உலகப்பிரகார, ஆவிக்குரிய சேவையை அவர்களுக்குச் செய்கிறேன். ஆனால், உமக்கோ நேரம் கொடுப்பதில்லை. உம் பிரசன்னத்தை நான் அசட்டைபண்ணக் கூடாது. நாளைய தினத்துக்காக கவலைப்படாமல், உம் சித்தமறிந்து உமக்காகப் பணிசெய்வேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments