top of page

திங்கள், அக்டோபர் 28

வாசிக்க: யோசுவா 1:1-9, 18


பயப்படாதீர்கள்; கர்த்தர் உங்களோடிருக்கிறார்!

நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். - சங்கீதம் 56:3

தான் தங்கியிருந்த கேரார் பள்ளத்தாக்கில் ஈசாக்கு தண்ணீர்த் துரவுகளைத் தோண்டியபோது, கேராரின் மேய்ப்பர்கள் ஈசாக்கின் வேலையாட்களோடுகூட வாக்குவாதம் பண்ணி, தோண்டிய துரவுகளுக்கு உரிமையும் கொண்டாடி அவற்றைத் தம் வசமாக்கிக்கொண்டார்கள் என்று ஆதியாகமம் 26:17-21 வரையுள்ள பகுதியில் வாசிக்கிறோம். எனவே, ஈசாக்கு அந்த இடத்தைவிட்டு பெயர்செபாவுக்கு வந்தான். அவனது எதிர்காலத்தைக் குறித்த பயம் ஒருவேளை அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால், அன்று இரவில் கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி அவனை உற்சாகப்படுத்தினார். நமது ஆண்டவர் ஈசாக்கின்மேல் அதிகக் கரிசனை காட்டி, அவனோடு இருந்து அவனது எதிராளிகளுக்கு மேலாக அவனை உயர்த்தி அவனை ஐசுவரியவானாக்கினார். இதற்கிடையில் அவனுக்கு எதிராக இருந்த அந்த மனுஷர் அவனிடம் வந்து, உம்மோடே தேவன் இருப்பதை நாங்கள் கண்டோம் என்று சொல்லி அவனோடு சமாதானம் செய்துகொள்ளவும் முயற்சித்தனர். அடுத்து, மோசே  மரித்தபிறகு, முரட்டாட்டமுள்ள இஸ்ரவேல் மக்களை கானானுக்கு நடத்திச் செல்லும் பொறுப்பு யோசுவாவின்மேல் விழுந்தது. மோசேயின் மரணத்திற்குப் பிறகு, யோசுவாவின் பயத்தை நன்கு அறிந்த கர்த்தர் அவனை நோக்கி: பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; பலங்கொண்டு திடமனதாயிரு என்றார். ஒருமுறையல்ல, யோசுவா முதலாம் அதிகாரத்தில் மாத்திரம் அவர் பலமுறை அவனைத் தைரியப்படுத்தினார் என்று வாசிக்கிறோம். (யோசுவா 1:6,7,9,18).  

அன்பானவர்களே, நம் ஆண்டவர் நம்மோடுகூடவே எப்போதும் இருக்கிறார், வருகிறார் என்பதை நாம் உணர்ந்திருந்தோமானால் நாம் எதற்கும் பயப்படமாட்டோம். தாம் இவ்வுலகைவிட்டு கடந்துபோகும் நேரம் வந்தபோது, இயேசு தமது சீஷர்களிடம், அவர்களோடு எப்போதும் இருக்கும்படியாக, ஒரு தேற்றரவாளனை, பரிசுத்த ஆவியானவரை அனுப்புவதாக வாக்களித்தார். அப்படியே செய்தார். இன்று ஆவியானவர் நம்முள்ளே வாசம் செய்கிறார். எப்போதும் நம்மோடுகூடவே இருக்கிறார். என்றென்றுமுள்ள சதாகாலமும் நமது ஆண்டவரே நமது இரட்சிப்பு; நமது பாதுகாப்பு; நமது வெளிச்சம்; நமது நம்பிக்கை! பின் ஏன் நாம் பயப்படவேண்டும்! (சங்கீதம் 27:1; மத்தேயு 28:20) அவரை நம்புவோம். அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடவே மாட்டார். 

ஜெபம்: ஆண்டவரே, நீர் என்னோடிருப்பதால் நான் இரவின் பயங்கரம், பகலில் பறக்கும் அம்பு,  இருளில் நடமாடும் கொள்ளைநோய், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரம் போன்றவற்றிற்கு ஒருபோதும் பயப்படாமல், நீர் என்னை விடுவிப்பீர் என உம்மையே நம்பியிருக்கக் கிருபை தாரும். ஆமென்.
 

அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும்.  நன்றி.

அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page