இயேசுகிறிஸ்து நித்திய ஜீவனை அளிக்கிறார்!
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ ... இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - ரோமர் 6:23
ஒரு பாவியின் நிலையைக் குறித்தும் அவனுக்குத் தேவையான இரட்சிப்பைக்குறித்தும் எபேசியர் 2:1-10 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன. முதல் மூன்று வசனங்கள் பாவத்தில் மரித்துக்கிடக்கும் அவனது நிலையையும், அடுத்த நான்கு வசனங்கள் கிறிஸ்துவுக்குள் அவனை உயிர்ப்பிக்கும் கர்த்தருடைய செயலையும் விளக்குகின்றன. அதற்கடுத்த மூன்று வசனங்களும் இரட்சிப்பைக்குறித்துப் பேசுகின்றன. மரித்துவிட்ட ஒருவன் எப்படித் தன் சரீரத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாதிருக்கிறானோ அப்படியே ஒரு பாவி கர்த்தரைக் குறித்து சற்றும் உணர்வற்றவனாக இருக்கிறான். (1 கொரிந்தயர் 2:14) மட்டுமின்றி, அவன் உலகத்துக்கும், மாம்சத்திற்கும், பிசாசிற்கும் கீழ்ப்பட்டிருக்கிறதினால் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல் போகிறான். அவனது கீழ்ப்படியாமை தேவ கோபத்தை அவன்மேல் கொண்டுவருகிறது. (வசனம் 3) மேலும், தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்று யோவான் 3:36 கூறுகிறது. அவன் எவ்வளவுதான் முயற்சித்தாலும், எத்தனை வழிகளை அவன் நாடினாலும், அவனால் தான் அமிழ்ந்துகொண்டிருக்கிற உளையான சேற்றிலிருந்து வெளிவரமுடியாது. ஆனால், கிருபையில் ஐசுவரியமுள்ளவரும் அன்பு நிறைந்தவருமான ஆண்டவரோ இப்படிப்பட்ட பரிதாப நிலையிருக்கும் ஒரு பாவியை உயிர்ப்பித்து, தூக்கி எடுக்கிறார்; அவனை இரட்சித்து, உன்னதங்களிலே கிறிஸ்துவோடேகூட உட்காரச் செய்கிறார். அவனுக்கு மறுபடியும் புதிதாய்ப் பிறக்கும் ஒரு அனுபவத்தைத் தருகிறார். இந்த இரட்சிப்பு மிகப்பெரிய அற்புதமல்லவா? எப்படி இந்த இரட்சிப்பைக் கர்த்தர் தருகிறார்?
முதலாவது, பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துகிறார். (யோவான் 16:8) இரண்டாவதாக, இச்சையினால் உண்டாகும் உலகக்கேட்டிற்கு நம்மைத் தப்புவித்து, அவரது திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாக அவரது வார்த்தை மாற்றுகிறது. (2 பேதுரு 1:4) எனவே, இரட்சிப்பைப்பெற்ற எந்த மனுஷனும் பாவி என்ற ஸ்தானத்திலிருந்து விடுதலையாகி, தேவனுடைய பிள்ளை என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டு அவரோடுகூட உன்னதத்திலே அமரும் வாய்ப்பைப் பெறுகிறான்.
அன்பானவர்களே, ஆண்டவர் இயேசுவின் மூலமாக மட்டுமே கிடைக்கின்ற இந்த இரட்சிப்பு முற்றிலும் இலவசமானது. அவரது கிருபையினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம். நமது கிரியைகளினாலே அல்ல! தேவையற்ற வழிபாடுகளுக்கும், பாரம்பரியங்களுக்கும் விலகி, இந்த இலவச ஈவை விசுவாசத்தால் இன்றே நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்: சர்வவல்லவரே, நான் பிசாசின் பொய்களுக்குச் செவிகொடுத்து உமக்குக் கீழ்ப்படியாமல் போனேன். உலகத்திற்கு ஒத்த வேஷந்தரித்து, கண்களின் இச்சை மற்றும் மாம்சத்தின் இச்சைக்கு இடம் கொடுத்தேன். என்னை மன்னியும். இயேசுவின் இரத்தத்தால் என் பாவங்களைக் கழுவி, இரட்சியும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments