சிலைகளைத் தவிர்த்து, தேவனுக்கே மகிமை செலுத்துங்கள்
... இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது. - எசேக்கியேல் 8:5
இஸ்ரவேல் சரித்திரத்திலேயே மிகவும் பொல்லாங்கான ராஜா மனாசே. இவன் எசேக்கியேல் காலத்துக்கு 1000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவன்; தாவீது, அவன் குமாரன் சாலொமோனிடம் தேவன், இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று சொன்ன தேவாலயத்திலே, தோப்புவிக்கிரகத்தின் உருவத்தை உண்டாக்கி வைத்தான். (2 ராஜாக்கள் 21:7) 2 இராஜாக்கள் 23:6ல், எழுதியிருக்கிறபடி யோசியா ராஜா, தோப்பு விக்கிரகத்தைக் கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், ... சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை(ப்) ... பிரேதக்குழிகளில் போடுவித்தான். தேவன் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்டதாவது: நீ அவைகளை (மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தை) நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய நான் எரிச்சலுள்ள தேவனாயிரு(க்கிறேன்) ... (யாத்திராகமம் 20:4,5) இஸ்ரவேலுக்குச் சொன்னது: கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். (யாத்திராகமம் 34:14) யெகோவா கானா என்றால் எரிச்சலுள்ள தேவன்! இது வலியுறுத்துகிற காரியம்: நாங்கள் அவருடையவர்கள் என்று சொல்பவர்களில் இரண்டுவித விசுவாசம் இருந்தால் தேவன் அதைப் பொறுத்துக்கொள்ளமாட்டார் என்பதே. நம் வாழ்வில் நம் குணாதிசயம், செயல்பாடுகளில் - மெய்யான தேவன் ஒருவரே என்று கர்த்தரைக் கனப்படுத்தவேண்டும்; வெறும் உதடுகளால் கனப்படுத்தக்கூடாது.
அன்பானவர்களே, நம் வாழ்வில் எந்தவொரு விக்கிரகத்தையும் நாம் மகிமைப்படுத்தக்கூடாது. செதுக்கப்பட்ட உருவத்துக்கு முன்பாக நாம் விழுந்து தொழுதுகொள்ளாவிட்டாலும், நம் இருதயத்துக்குள், வாழ்விற்குள் சில அதிநவீன விக்கிரகங்களை வைத்திருக்கலாம். விக்கிரகம் என்பதற்கு அகராதி கூறும் விளக்கம்: ஒரு நபரை, பொருளைக் கண்மூடித்தனமாகப் புகழ்ந்து, வழிபட்டு, விரும்புவது விக்கிரகம். நம் வாழ்வில் - வெற்றிகரமான தொழிலா, கல்வியா, புகழா, பெயரா, நவீன வாழ்க்கைமுறையா எதை விரும்புகிறோம்? இவை எடுபட்டாலும் நான் ஆண்டவரை நேசித்து அவர்பின் செல்வேனா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, ஒரு விக்கிரகத்தை உருவாக்கி, தொழுதுகொள்ளாதபடி நான் ஜாக்கிரதையாயிருப்பேன். வேறு யாரையும் மகிமைப்படுத்தமாட்டேன். உலக ஆசை, பொருள், கல்வி இவற்றை மேம்படுத்தி, என்னை உம்மைவிட்டு பிரிக்கவிடமாட்டேன். நீர் வைராக்கியமுள்ள தேவன், நான் உமது விலைமதிப்பற்ற பொக்கிஷம். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments