top of page

ஞாயிறு, மார்ச் 23 || உபவாசம் கட்டாயமானது!

வாசிக்க: மத்தேயு 6: 16-18


... ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை... - தானியேல் 10:3


தமது மலைப்பிரசங்கத்தில் ஆண்டவர் இயேசு உபவாசிப்பதைக் குறித்து மக்களுக்குப் போதித்தார்.  உபவாசத்தை அவர்கள் புறக்கணிக்கும்படியோ அல்லது அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள் அல்லது தலைவர்களை மட்டுமே பார்த்து, நீங்கள் உபவாசித்தால் என்று இயேசு கூறாமல், அனைத்து மக்களிடமும் திட்டவட்டமாக, நீங்கள் உபவாசிக்கும்போது என்று கூறினார்.  எனவே, இயேசுவின் சீஷரான நாம் எல்லோரும் உபவாசிக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது - அது நம்முடைய விருப்பத்தின்படியல்ல, நாம் கட்டாயமாகக் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்றாயிருக்கிறது.   

அன்பானவர்களே, நாம் ஏன் உபவாசிக்கவேண்டும்? நமது தனிப்பட்ட வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கு உபவாசம் தேவை. அது நமது உடலைக் கட்டுக்குள் வைக்கவும், ஆத்துமாவைத் தாழ்த்தவும் தேவையான ஒன்றாயிருக்கிறது என்று ஆர்தர் வாலிஸ் என்பவர் எழுதுகிறார். உபவாசமானது நாம் கர்த்தரை இன்னும் நெருங்கிச் சேரவும், அவரைப்பற்றி அறிந்து அவரோடு அளவளாவவும் உதவி செய்கிறது. ஒருவேளை பரலோகம் நமது ஜெபங்களுக்குத் திறக்கப்படாமல் வெண்கலம்போல் இருக்குமானால், நமது உபவாசம் அதை நிச்சயம் திறக்கும் வல்லமை படைத்தது. தாங்கள் அழிவை எதிர்நோக்கி நின்ற நேரங்களில் இஸ்ரவேலர் தங்களை ஒடுக்கி உபவாசம் பண்ணி வேண்டுதல் செய்தபோது கர்த்தர் அற்புதமாக அவர்களை விடுவித்தார். உபவாசம் பிசாசைத் துரத்த நமக்கு வல்லமை தருகிறது. மேலும், இந்தப் பொல்லா உலக சிற்றின்பங்களிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு தேவனை நோக்கி நம் பார்வையைத் திருப்ப உபவாசத்தைப்போல் சிறந்த வழி வேறொன்றில்லை. எனவே, நண்பர்களே, நமது ஜெபத்தை உபவாசத்தால் வல்லமைப் படுத்துவோம். இவை இரண்டும் நம் வாழ்வின் அங்கங்களாகவே மாறவேண்டும். அப்படி நடக்கும்போது நாம் நமது பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெறுவதோடு, பிசாசின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவோம். அதோடு, ஆண்டவரை இன்னும் ஆழமாக அறிந்துகொள்வோம். ஆண்டவர்தாமே இப்படி ஜெபத்திலும் உபவாசத்திலும் தரித்திருக்க நமக்கு உதவி செய்வாராக.
ஜெபம்: தேவனே, உபவாசத்தை அசட்டை செய்யாமல் ஒழுங்காய் கடைப்பிடிக்க விரும்புகிறேன். வாரம் இரண்டு முறையாவது உபவாசிக்க எனக்கு உமது கிருபையைத் தாரும். உம்மைப் பற்றிக்கொள்ள, பிசாசைத் தோற்கடிக்க, உலகக் காரியங்களிலிருந்து விடுதலைபெற உதவி செய்யும். ஆமென்.
 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page