ஞாயிறு, மார்ச் 16 || அரைகுறையான கீழ்ப்படிதல் என்பது கீழ்ப்படியாமையே
- Honey Drops for Every Soul
- Mar 16
- 1 min read
வாசிக்க: 1 சாமுவேல் 15: 1-9
... பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
- 1 சாமுவேல் 15 : 22
அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரிக்கும்படி சவுலுக்கு சாமுவேல் மூலமாக கர்த்தர் கட்டளையிட்டார். அதன்படி, சவுல் அமலேக்கியருக்கு எதிராக யுத்தம்பண்ணினான்; ஆனாலும், அவன் ஆண்டவருக்கு முழுமையாக கீழ்ப்படியவில்லை. முதல்தரமான ஆடுமாடுகளையும், நலமான எல்லாவற்றையும் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமானவற்றை முற்றிலும் அழித்துப்போட்டான். சவுலுக்கு அரைகுறை கீழ்ப்படிதலே போதுமானதாக இருந்தது! கர்த்தரின் வார்த்தையை நிறைவேற்றினேன் என சாமுவேலிடம், அவன் கூறினான். (1 சாமுவேல் 15:13) ஆனால், சாமுவேலுக்கு அது பொல்லாப்பாய்த் தோன்றினபடியால், பில்லிசூனியத்துக்கும் விக்கிரகாராதனைக்கும் நிகராகவே அதைப் பார்த்தான்!
அன்பானவர்களே, இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்கும் பாடம் மிகவும் முக்கியமானது - அரைகுறையான கீழ்ப்படிதல் என்பது கீழ்ப்படியாமையே! எனவே, குறைவுள்ள மனுஷீக முறைப்படி அல்ல, தேவ வார்த்தையின்படி நம்மை நாமே சோதித்து அறிவோம். அவரது கட்டளைகளை நம் இருதயத்தில் வைத்து, அவற்றுக்கு முழுதும் கீழ்ப்படிகிறோமா? உதாரணமாக, நமக்குத் தவறிழைத்தவர்களை நாம் மன்னிக்கிறோமா? முழு மனதாய் அவர்களை மன்னிக்கிறோமா அல்லது அரைகுறையாக மன்னிக்கிறோமா? வேதம் நமக்குச் சொல்வது என்னவென்றால், கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிக்கவேண்டும். (எபேசியர் 4:32) நமது முழுமையான கீழ்ப்படிதலையே கர்த்தர் விரும்புகிறார். நாம் ஒருநாளிலே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளாயிருந்தோம், ஆனால் இப்போது வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருக்கிறோம்.1 பேதுரு 1:14,15, நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள் என்கிறது. எனவே, நம்மால் எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளிலும் கர்த்தருடைய வார்த்தைக்கு முழுவதுமாய்க் கீழ்ப்படிவதற்கு நாம் கவனமாயிருப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, என்னிடம் சிலவற்றைச் செய்யவோ, செய்யாதிருக்கவோ நீர் சொன்னால், அப்படியே நான் கீழ்ப்படிய உதவும். என் மூளையறிவினாலே சூழ்நிலையை மதிப்பிட்டு, உமது கட்டளைகளை புறம்பே தள்ளும் முடிவை நான் எடுக்காதிருக்க, ஆண்டவரே உமது கிருபையை எனக்குத் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments