top of page

ஞாயிறு, மார்ச் 09 || உங்கள் பாவத்தை மறைக்காமல் அறிக்கையிடுங்கள்


எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, ... அவன் பாக்கியவான். - சங்கீதம் 32:2


சங்கீதம் 32 மற்றும் 51, தாவீது தனது பாவங்களை அறிக்கையிடுவதை, அவனது மனந்திரும்புதலை, அவனுடைய மீட்டெடுத்தலை விளக்கிச் சொல்கின்றன. தன் பாவங்களை மறைக்க தாவீது எடுத்த முயற்சிக்கு அவன் அதிக விலை கொடுக்க வேண்டியதாயிருந்தது. பாவம் தாவீதின் சரீரத்திலும், மனதிலும் பெரிய பாதிப்பையுண்டாக்கியது; இந்த சங்கீதங்கள் பாவத்தை மறைப்பதால் வருகின்ற ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சிபூர்வ விளைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது. சங்கீதம் 32:3,4ல் தாவீது,  நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று .. என் சாரம் .. வறண்டுபோயிற்று என்று புலம்பினான். தான் செய்யக்கூடாததைச் செய்த ஒரு குழந்தையை நீங்கள் என்றாவது கவனித்திருக்கிறீர்களா? அது என்ன செய்தது என்று நமக்குத் தெரியாதிருக்கலாம், ஆனால் ஏதோ ஒன்றைக்குறித்த குற்றவுணர்வு அதற்கு இருக்கிறது என்று நமக்குத் தெரியும். அது எப்படி? அதனுடைய கண்கள் நமக்கு அதை வெளிப்படுத்திவிடும்! இவர்களுக்குத் தெரியுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று தனக்குள்ளே அது பேசிக்கொள்ளும். எங்கே போனாலும் அங்கெல்லாம், பிடிபட்டுவிடுவோமோ என்ற அச்சம் அதற்குள் வரும். தாவீதுக்கும் இப்படிப்பட்ட அனுபவமே ஏற்பட்டது. அவன் வானத்தைப் பார்க்கும்போது, வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது என்று கூறுவான். (சங்கீதம் 19:1) பெருவெள்ளத்தை அவன் பார்த்தால், கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்; என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார் என்பான். (சங்கீதம் 29:10) ஆனால் இவை அனைத்துமே நின்றுபோயிற்று. தேவனிலோ அவர் சிருஷ்டிகளிலோ அவனால் மகிமையைக் காணமுடியவில்லை. பின் எதைத்தான் அவன் பார்த்தான்? அவன் சங்கீதம் 51:3ல் இப்படி அறிக்கையிட்டான்: என் பாவம் எனக்கு முன்பாக நிற்கிறது. ஆனால், நற்செய்தி என்னவெனில், தன் பாவத்திலே தாவீது நிலைத்திருக்கவில்லை. மனந்திரும்பி, தன் பாவங்களைத் தேவனிடத்தில் அவன் அறிக்கையிட்டான். கர்த்தரும் அவனைக் கழுவி, சுத்திகரித்தார்.


 அன்பர்களே, பாவத்தை மறைப்பது அதிக விலைகொடுக்க நேரிடும். நம் பாவத்தை அறிக்கையிட்டால் தாவீதுக்கு செய்ததுபோல நமக்கும் செய்வார். அவர் இரக்கமுள்ளவர்; அவர் நாமத்தைக் கூப்பிடுகிற யாவரையும் அவர் கைவிடவே மாட்டார்!
ஜெபம்: ஆண்டவரே, தாவீது பாவம் செய்வதற்கு முன் உமக்கு நண்பனாயிருந்து, ஆவிக்குரிய ஆசீர்வாதம் பெற்றான்; பாவம் செய்தபின்பு அவன் தீட்டுப்பட்டான். நீர் கைவிட்டதுபோல உணர்ந்தான். மனந்திரும்பினபோது, உம் இரக்கத்தினால் மன்னித்தீர். பாவத்தை அறிக்கையிடும் என்னையும் நீர் சுத்திகரியும். ஆமென். 

 

தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page