வாசிக்க: உபாகமம் 7: 6-10
அவர் உண்மையுள்ள தேவன்!
ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், ... அவர் ... உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், ... நீ அறியக்கடவாய். - உபாகமம் 7: 9,10
நாற்பதாண்டு வனாந்தரப் பயணத்தில் கலகம்பண்ணின ஜனங்கள் மரணமடைந்த பின், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலர் பிரவேசிக்கும் நேரம் வந்தது. அவர்கள் நுழைவதற்கு முன்பதாக, மோசே பல தொடர் போதனைகளை கொடுத்தான். வனாந்தரப் பயணத்தின்போது பிறந்த அடுத்த தலைமுறை இஸ்ரவேலருக்குப் போதித்தான். சீனாய் மலையிலே முதன்முதலில் இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் தரப்பட்ட சமயத்தில், இவர்கள் மிகவும் சிறியவர்களாகவோ அல்லது இன்னமும் பிறவாதவர்களாகவோ இருந்திருக்கக் கூடும். தேவன் தாம் வாக்களித்தபடியே அவர்களுடனே இருந்தார் என்பதை இந்த தலைமுறையினர் அறியவேண்டியதாய் இருந்தது. எனவே கர்த்தர் உண்மையுள்ளவர் என்றும், அவர்கள் அவரிடத்திலே இளைப்பாறுதல் பெறலாம் என்றும், அவரது வார்த்தையில் நம்பிக்கை வைத்து, அவரது வல்லமையில் சார்ந்துகொள்ளலாம் என்றும் மோசே அவர்களுக்கு நினைப்பூட்டினான். அவர்கள் செல்லும் பாதையில் வருகின்ற எதையும் தாண்டிச் செல்வதற்கு அவர் உதவி செய்வார் என்றும் அவன் கூறினான்.
அன்பானவர்களே, இன்றைக்கு நமக்கும்கூட இத்தகைய நினைப்பூட்டுதல் தேவையாயிருக்கிறது. முதலாவது, தேவன் தம் அன்பை நம்மேல் வைத்திருக்கிறார் என்றும், இரண்டாவது, சகல ஜனங்களிலும் அவர் நம்மை மட்டும் தெரிந்தெடுத்து தம் சொந்த ஜனமாக்கிக் கொண்டார் என்றும் நினைவில் கொள்ளவேண்டும். சகல ஜனங்களிலே அவர்கள் திரட்சியான ஜனமென்பதற்காக தாம் அவர்களைத் தெரிந்துகொள்ளவில்லை என்றும், சகல ஜனங்களில் அவர்கள் கொஞ்சமாயிருந்தும் தாம் அவர்கள்மேல் அன்புகூர்ந்ததினால் அவர்களைத் தெரிந்துகொண்டார் என்றும் கர்த்தர் இஸ்ரவேலரிடம் கூறினார். அதுபோல, நம்மில் நன்மை ஒன்றைக் கண்டு தேவன் நம்மை இரட்சிக்கவில்லை. எல்லாரும் தேவமகிமையற்றுப் போனோம் என்று வேதம் கூறுகிறதே! (ரோமர் 3:23) நம் செயல்கள், நம் பேச்சு, நம் உடமைகளைக் கண்டு தேவன் நம்மை இரட்சிக்கவில்லை; அவர் நம்மேல் வைத்த அன்பினாலே நம்மைத் தெரிந்துகொண்டார்! கடைசிவரை நம்மைக் கைவிடுவதில்லை, விட்டுவிலகுவதில்லை என்று அவர் வாக்களித்திருப்பதால் ஆறுதல் பெறுவோம். நாம் சேவிக்கின்ற தேவன் உண்மையுள்ளவர். அவரது உண்மைத்துவம் அளவற்றதாக, கைவிடாததாக, அபரிமிதமானதாக இருக்கிறது!
ஜெபம்: ஆண்டவரே, உம்மை, உம் வல்லமையை, உம் வாக்கை நான் நம்பி உம்மில் சார்ந்துகொள்ளலாம் என்ற உறுதிப்பாட்டைத் தந்த உமக்கு நன்றி. என்னில் நன்மையொன்றும் இல்லாவிடினும், நீர் என்னை நேசித்து, உமது பொக்கிஷமாக்கினீர். இந்த உறுதியுடன் என் வாழ்வில் ஜெயத்துடன் முன்னேற எனக்கு உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments