top of page

ஞாயிறு, நவம்பர் 10 || தெளிதேன் துளிகள் ||


நம் வாழ்விலே ஆவியின் கனி காணப்படுகிறதா?


ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.    (கலாத்தியர் 5:22,23)


ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் மாம்சம், ஆவி ஆகிய இரண்டு வல்லமைகள் செயல்படுகின்றன. மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் கிரியை செய்கின்றது. வேறுவிதத்தில் சொன்னால், மாம்சத்தின் கிரியைகளால் வெளிப்படும் இயற்கையான வல்லமை, ஆவியின் கிரியைகளால் வெளிப்படும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை என்று இரண்டு முரணான வல்லமைகள் உள்ளன. மாம்சத்தில் வாழும் வாழ்க்கை தீய கிரியைகளை வெளிப்படுத்துகிறது. (கலாத்தியர் 5:19-21). ஆனால் ஆவியினால் வாழும் வாழ்க்கை நற்குணங்களை வெளிப்படுத்துகிறது. (கலாத்தியர் 5:22-23). 1 கொரிந்தியர் 12:1-11ல், பவுல் ஆவியின் வரங்களைப் பற்றி பேசுகிறான். இவற்றை ஆவியின் கனியுடன் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கு உதவ அநேக விசுவாசிகளுக்கு கொடுக்கப்படும் திறன்தான் வரங்கள். ஆகவே எல்லா விசுவாசிகளும் ஒரே வரத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது. சிலருக்கு தீர்க்கதரிசன வரம், சிலருக்கு சுகமளிக்கும் வரம் போன்றவை இருக்கலாம். இங்கு பவுல் கூறும் ஆவியின் கனியோ ஆவியானவரால் நடத்தப்படும் ஒவ்வொரு விசுவாசியிடமும் முழுமையாகக் காணப்படும். ஆனால், வரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் சில கிறிஸ்தவர்கள் ஆவியின் கனியை அசட்டைசெய்கிறார்கள். விசேஷித்த திறன்கள் வெளிப்படுவதற்கு முன், முதலாவதாக கிறிஸ்தவ குணம் கட்டப்படவேண்டும் என்று வாரன் வியர்ஸ்பி எழுதுகிறார். கனிக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. முதலாவது, செய்கை ‡ நற்குண செயல்கள், கொடுத்தல், பிறரை கிறிஸ்துவுக்குள் நடத்துதல் போன்றவை. இரண்டாவது, மனப்பான்மை ‡ அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவை. சரியான மனப்பான்மையற்ற செய்கை வெறும் மாய்மாலமே. எனவே, நமக்கு சரியான மனப்பான்மை (கனி) வேண்டும்; நமது நல்ல மனப்பான்மையினால் நமது கிரியை வெளிப்படவேண்டும்.   


அன்பானவர்களே, யாராவது நம்மிடம், நீ கிறிஸ்தவன் என்று என்னால் எப்படி அறிய முடியும்? என்று கேட்டால், என்னோடு சில நேரம் இரு என்று சொல்லக்கூடியவர்களாக நாம் இருக்கவேண்டும். நம்மிடம் அன்பு, சந்தோஷம், சமாதானம் ஆகியவற்றை அவர்கள் காணும்போது நாம் மாம்சத்தில் செயல்படவில்லை என்பதை அறிந்துகொள்வார்கள். இப்படித்தான் நமது கிறிஸ்தவ சாட்சியை நம்மால் வெளிப்படுத்த முடியும்.

ஜெபம்:  ஆண்டவரே, ஆவியின் வரங்களுக்கும், ஆவியின் கனிக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொண்டேன். வரங்கள் சபையின் ஊழியத்திற்காகவும், கனி என் தனிப்பட்ட கிறிஸ்தவ சாட்சியை வெளிப்படுத்துவதற்காகவும் தரப்படுகின்றன. நாம் கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்த ஆவியின் கனி அவசியம்! நான் எப்போதும் ஆவியானவரால் நிரம்பியிருக்க உதவும். ஆமென்.

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
bottom of page