வாசிக்க: 2 இராஜாக்கள் 17: 24-29, 32-34
பிரிந்துபோகாத இருதயம் நமக்கு இருக்கவேண்டும்
அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். - 2 இராஜாக்கள் 17:33
பிரிந்துபோன தேசம் - சமாரியா! யெரொபெயாம் ராஜா காலத்திலிருந்து, இஸ்ரவேலின் வடதேசமாகிய சமாரியா தங்கள் தேவனை மறந்துவிட்டு, அந்நிய தேவர்களை ஆராதிக்கத் தொடங்கிற்று. பின்னர், அவர்களை ஆண்ட தீய ராஜாக்களும் அதிகமான பாவத்துக்குள்ளாக ஜனங்களை நடத்தினபடியால், அசீரிய சிறையிருப்பில் தேசம் போகும்படிக்கு தேவன் அனுமதித்தார். அவர்களிருந்த இடத்தில் அந்நிய தேச மக்களை கொண்டுவந்து அசீரியா ராஜா குடியேற்றினான். ஆனால், இந்த ஜனங்கள் தேவனை ஆராதிக்காததால், அவர் சிங்கங்களை அனுப்பி சிலரைக் கொன்றுபோட்டார். எனவே, தேவ காரியங்களைக் குறித்து அவர்களுக்குக் கற்பிக்க ராஜா சிறையிருப்பிலிருந்த ஆசாரியர்களில் சிலரை அனுப்பினான். (2 ராஜாக்கள் 17:27) ஆனாலும், ஜனங்கள் தேவனை ஆராதித்ததோடுகூட தங்களது தேவர்களையும் சேர்த்தே ஆராதித்தனர். இந்தக் காரியம் தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கு முரண்பாடாய் இருந்தபடியால், பொல்லாத விளைவுகளைக் கொண்டுவந்தது.
அன்பானவர்களே, நாம் நம் தேவனை ஆராதிக்கும்போது விசுவாசம் பிரிந்துபோகக்கூடாது. பல நூற்றாண்டுகளுக்குப் பின் பிரிந்திருக்கிற வீட்டைக்குறித்து (மத்தேயு 12: 24-29) இயேசு பேசினார். பெயல்செபூலின் வல்லமையால் அவர் பிசாசுகளைத் துரத்துகிறார் என பரிசேயர் அவர்மேல் குற்றஞ்சாட்டினார்கள். இயேசு அவர்களிடம், சாத்தானின் கூட்டத்தில் தாம் இருந்தால் எப்படி அவன் வல்லமையைக்கொண்டு அவனுக்கு எதிராகச் செயல்படமுடியும் என்று சுட்டிக்காட்டினார். தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம் என்று அவர் கூறினார். சமாரியாவுக்கு அப்படித்தான் ஆயிற்று. மறுபடியும் தன் ஆவிக்குரிய வல்லமை, அரசியல் வல்லமையை அது பெறவே முடியவில்லை. சமாரியாவிடத்தில் நல்லதொரு பாடத்தை நாம் கற்கலாம் - நம் அவசரமான வாழ்வில், நமது நேரம், கவனம் சுலபமாக இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிடும். சமாரியரைப்போல, அறியாமலேயே தேவனைச் சேவிப்பதோடு பிறவற்றையும் சேவிப்போம். நம் இருதயம் பிரிந்துபோகாதபடி நம்முடைய ஜெபம், வேதவாக்கிய தியானத்தால் காத்து, தேவன்மீது மட்டுமே நம்முடைய கவனத்தைச் செலுத்துவோம்.
ஜெபம்: ஆண்டவரே, பிரிந்துபோகும் இருதயமின்றி என்னை நீர் காத்துக் கொள்ளும். உலகத்தின் தேவர்கள்மீது நாட்டம் வைக்காது, உம்மில் விசுவாசம் வைக்க உதவும்.ஜெபத்தினாலும் வார்த்தையைத் தியானிப்பதாலும், உம்முடன் நான் நெருங்கிய ஐக்கியம் கொள்ள உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments