top of page

ஞாயிறு, டிசம்பர் 22 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: லூக்கா 1: 39-45


எலிசபெத்து ‡ மேசியாவின் முன்னோடியாளரின் தாய்


... ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது.

- லூக்கா 1:42


எலிசபெத்து தனித்தன்மை வாய்ந்தவள். வேதத்திலே அவள் ஒருவளுக்கு மட்டுமே இந்தப் பெயர் உண்டு. இயேசுவின் தாயாராகிய மரியாளுக்கு அடுத்தபடி அவள் ஒருவள் மட்டுமே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தாள் என்று வேதம் கூறுகிறது. (லூக்கா 1:41) ஆரோனின் குமாரத்தியாய் இருந்தாள் எலிசபெத்து. மேலும் ஆசாரியன் சகரியாவின் மனைவியாகவும் இருந்த அவளுடைய குடும்பம் பரிசுத்தமும் மகிழ்ச்சியுமாக இருந்திருக்கவேண்டும். ஆனாலும், அவர்களுடைய வீட்டிலே குழந்தைச் செல்வம் இல்லை; எனவே, அவர்களிருவரும் சேர்ந்து ஜெபித்தார்கள். அது சுயநலத்தின் ஜெபமல்ல - தங்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஏக்கத்தினாலல்ல, சகரியாவுக்கு ஒரு சுதந்தரவாளி வேண்டும் என்பதற்காகவும் அல்ல. சந்தேகமின்றி அந்த ஜெபம் இஸ்ரவேல் தேசத்தின் நலனுக்காகவே ஏறெடுக்கப் பட்டது. அவர்கள் இருவரும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் நடந்து, இருவரும் சேர்ந்து ஜெபித்ததன் விளைவாக, அவர்களது ஜெபத்துக்கு யோவான்ஸ்நானகன் பிறப்பின் மூலமாகப் பதில் வந்தது!  

 எலிசபெத்துவின் கர்ப்பகாலத்தில் அவளது உறவினளான மரியாள் அவளைப் பார்க்கும்படி வந்தபோது, மரியாளுக்கு எலிசபெத் கூறிய வாழ்த்து வியக்கவைக்கிறது! என் ஆண்டவருடைய தாயார் என்று மரியாளை அவள் வாழ்த்தினாள். தான் கர்ப்பமாக இருப்பதாக மரியாள் சொல்வதற்கு முன்பே, உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று ஆசீர்வதித்தாள் எலிசபெத்! மேலும், இயேசு பிறப்பதற்கு முன்னமே அவள் அவரை, என் ஆண்டவர் என்று அழைத்தாள். தன் இனத்தாளாகிய மரியாள் மேசியாவைக் கர்ப்பத்தில் சுமந்திருந்தாள் என்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாட்டைப் பெற்றிருந்தாள் எலிசபெத்து! எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டது மட்டுமல்ல, அவராலே மரியாளின் கர்ப்பத்தில் இருந்தவர் வெகுகாலமாய் எதிர்பார்த்திருந்த மேசியா என்கின்ற உள்ளுணர்வைப் பெற்று, அவரைத் தன் ஆண்டவர் என அடையாளம் கண்டுகொண்டாள். அன்பானவர்களே, எலிசபெத்து ஒரு விசுவாசப் பெண்மணி; அவள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, அவரது குரலை உணரக்கூடியவளாக இருந்தாள். எலிசபெத்து என்னும் இந்த தேவமனுஷியின் மனப்பான்மையை நாமும் பெற்றிருந்தால் அது எத்தனை நலமாயிருக்கும்!
ஜெபம்: ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியால் என்னை நிரப்பும். என் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகள் பிறருக்கு ஆசீர்வாதமாயிருக்கட்டும். நான் எலிசபெத்து போன்று, நீதியாய் நடந்து, தாழ்மையுடனிருந்து, உம் சித்தத்துக்கு என்னை சமர்ப்பிப்பேன். உமக்கே மகிமையும் கனமும் உண்டாவதாக! ஆமென்

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page