top of page

ஞாயிறு, ஜனவரி 26 || தெளிதேன் துளிகள்


எனது ஆத்துமாவை உயிர்ப்பியும் ஆண்டவரே!


... இஸ்ரவேல் புத்திரரே,.. தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது... உங்களண்டைக்கு அவர் திரும்புவார்.- 2 நாளாகமம் 30:6


பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர் மறுபடியும் மறுபடியும் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து விக்கிரக வழிபாடுகளுக்குத் திரும்பினர். ஆனாலும் கர்த்தர் அவர்களைக் கைவிடவில்லை. நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுவதும் என் கைகளை நீட்டினேன் என்று அவர் வருத்தப்படுவதை நாம் ஏசாயா 65:2ல் வாசிக்கலாம். அன்புடன் அவர் நீட்டிய கரத்தையும் அவர்கள் புறக்கணித்தார்கள். ஆயினும் அவரது அன்பு பெருகியது. தமது தீர்க்கதரிசிகள், நீதியாய் அரசாண்ட ராஜாக்கள், தலைவர்கள் மூலமாக இஸ்ரவேலரை தம்மண்டைக்கு இழுத்துக்கொள்ள அவரது அன்புக் கரங்கள் நீட்டப்படுவதையும், கடினக்கழுத்துடன் அவர்கள் முரட்டாட்டம் செய்து விலகிப்போவதையும் நாம் வாசிக்கமுடியும். கடைசியில், ஒரு மாபெரும் எழுப்புதலைக் கொண்டுவர தமது ஒரே குமாரனை அவர் இந்தப் பூவுலகிற்கு அனுப்பவேண்டியதாயிற்று. பிறகு, தமது ஆவியானவரை அனுப்பி பெந்தெகொஸ்தே அனுபவத்தின் வாயிலாக ஒரு வல்லமையான எழுப்புதலை அவர் நிறைவேற்றினதை நாம் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆம்! இப்படிப்பட்ட எழுப்புதல் தீயில்தான் சபை உதயமானது. கர்த்தருடைய பிரசன்னமாகுதலும், அவரது பரிசுத்தமும் நீதியும் கொண்டுவரும் கண்டிப்பான உணர்த்துதலுமே எழுப்புதல் எனலாம். நமக்கு நேரே நீட்டப்பட்டிருக்கும் அவரது கரமும், நம்மைவிட்டு விலக மனமில்லாத அவரது அன்புமே எழுப்புதல் என்றாலும் அது மிகையாகாது. 



	அன்பானவர்களே, நம் ஆண்டவர் அன்புள்ளவர்; அவர் நம்மை ஆசீர்வதிக்கிறவர்; அவர் நம்மை மன்னிக்கிறவர்; அவர் நம்மைத் தண்டிப்பதற்குத் தயங்குபவர். (யாத்திராகமம் 34:6) ஆனால் தமது மக்கள் தம்மைவிட்டு விலகும்போது அவர்களைத் திருப்பிக்கொள்வதற்காக அவர்களை மட்டாய்த் தண்டித்து, மனந்திரும்புதலுக்கு நேராக நடத்தி மனதுருக்கத்தைப் பொழிகிறார். இப்படிப்பட்ட நல்ல தேவனுக்கு முன்பாக நமது முழங்கால்கள் மடங்கட்டும். அவர் நமது ஆத்துமாவில் தரவிரும்பும் எழுப்புதலைப் பெற்று அவருக்காக வாழும்படி நாம் மனமாற்றம் அடைவோம். 

ஜெபம்: தேவனே, எனது ஜெபவாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டு உம்மண்டை நெருங்கிச் சேர எனக்கு உதவி செய்யும். எனது அக்கிரமங்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். எனது ஆவி ஆத்துமா சரீரம் எழுப்புதலடையும்படி உமது ஆவியை எனக்குள் ஊற்றும். எழுப்புதல் என்னிலிருந்து தொடங்கட்டும்.  ஆமென். 
 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page