top of page

ஞாயிறு, ஜனவரி 05 || தெளிதேன் துளிகள்


கிறிஸ்து இயேசுவுக்குள் வேர்கொண்டு, அவரில் கட்டப்படு


ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு ...  - கொலோசெயர் 2:6


ஒரு மரமும் ஒரு கட்டிடமும் இங்கு குறிக்கப்படுகின்றன. வேர்கொள்ளுதல் என்ற வார்த்தை, ஒரு மரம் தனது வேர்களை மண்ணுக்குள்ளே ஆழமாக விடுகிறதைக்குறித்துப் பேசுகிறது. கட்டப்படுதல் என்ற வார்த்தை, நிலையான அஸ்திபாரத்தின் மேல் ஒரு வீடு நிறுவப்படுவதைக்குறித்துப் பேசுகிறது. பெரிய மரமானது தன் வேர்களை மண்ணுக்குள் ஆழமாகச் செலுத்தி, மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகிறதைப்போலவே, தன் வாழ்விற்கும் பெலனுக்கும் மூலகாரணரான கிறிஸ்துவுக்குள் ஒரு கிறிஸ்தவனும் வேர்கொள்ளவேண்டும். ஒரு வீடு உறுதியான அஸ்திபாரத்தில் ஸ்திரமாக நிற்பதுபோலவே, கிறிஸ்தவனுடைய வாழ்க்கையும் கிறிஸ்துவின்மேல் கட்டப்படுமானால், அது மிக உறுதியுடன், எந்தப் புயலையும் சமாளிக்க வல்லதாயிருக்கும்.

 அன்பானவர்களே, நம் ஆவிக்குரிய வாழ்வில் தொடர்ந்து முன்னேற ஒரே வழி கிறிஸ்துவுக்குள் வேர்கொள்ளுவதே! கிறிஸ்தவர்களான நாம் வேரற்றுப் போய் பதராய் மாறி, பலவித கொள்கைகளால்  பறக்கடிக்கப்படக் கூடாது. நாம் உறுதியான மரங்களைப்போல இருக்கவேண்டும். சில விசுவாசிகளுக்கு ஆண்டவருடன் உள்ள உறவு அவர்களது உணர்ச்சியை சார்ந்திருக்கிறது. அவர்கள் பல வேத ஆராய்ச்சிக் கூட்டங்கள், வேதாகம கருத்தரங்குகளுக்குச் சென்று, தங்களது உணர்ச்சிவசப்பட்ட நிலையை உச்சத்தில் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இது பலவேளையில் ஏமாற்றத்துக்கு நேராய் நடத்திவிடும். உணர்ச்சி சார்ந்த விசுவாசத்துக்கு ஒரே மாற்றுமருந்து - கிறிஸ்துவை மையமாகக் கொண்ட விசுவாசமே! விசுவாசத்தால் கிறிஸ்துஇயேசுவை ஏற்றுக்கொண்ட நாம், அந்த விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, அவருடன் ஐக்கியம் கொண்டு, தினமும் அவரோடு நடக்கவேண்டும்.  நம் விசுவாசத்தில் நாம் ஸ்திரப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்? முதலாவது, வேதத்தை வாசிக்க நம்மை அர்ப்பணிக்கவேண்டும், பரிசுத்த ஆவி மற்றும் வேதவார்ததை போன்ற பரிசுத்தமானவைகள் மேல் நமக்கிருக்கும் வாஞ்சையை அவித்துப்போடுகின்ற, நமக்குத் தெரிந்த நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட வேண்டும். இரண்டாவது, நம்மைச் சத்தியத்துக்கு நேராய் நடத்தும்படிக்கும், தவறான கொள்கை கோட்பாடுகளில் இருந்து நம்மை விலக்கும்படிக்கும் தேவனிடத்தில் நாம் மன்றாடிக் கேட்கவேண்டும்.
ஜெபம்: ஆண்டவரே, தவறான கொள்கை கோட்பாடுகளினால் நான் பறக்கடிக்கப் படாதபடி காத்துக்கொள்ளும். மரம் ஆழமாய் மண்ணில் வேர்விடுவதுபோல நானும் உம்மில் வேரூன்றட்டும். உம்மிடத்தில் ஊட்டம் பெற்று, என் விசுவாசத்தில் உறுதிப்பட, உறுதியான அஸ்திபாரத்தில் நிற்கும் வீடுபோன்று உம்மில் நான் கட்டப்பட, அனுதின வேதவாசிப்பால் என் விசுவாசம் உறுதிப்பட உதவும். ஆமென்

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page