top of page

ஞாயிறு, ஏப்ரல் 20 || தேவன் கல்லைப் புரட்டிப்போடுவார்!


வாசிக்க: மாற்கு 16: 1-6


அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள்.

- மாற்கு 16:4



உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த திருநாளின் வாழ்த்துக்கள்! உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம் இருதயங்களை நம்பிக்கையாலும், மகிழ்ச்சியாலும் நிரப்பி, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் அனுபவிக்க நமக்கு உதவி செய்வாராக!


ஓய்வுநாளுக்குப் பின்பு, மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்த வர்க்கங்களை வாங்கிக்கொண்டு இயேசுவை வைத்த கல்லறையினிடத்தில் வந்தனர். அவரை வைத்த இடமாகிய, கல்லறை முன்பு வைக்கப்பட்டிருந்த பளுவான கல்லை தள்ளுவதிலுள்ள சிரமம் அவர்களைக் கவலை, பயத்தில் ஆழ்த்தியது. ஆனால், அவர்கள் ஏறிட்டுப் பார்க்கும்போது, அந்தப் பெரிய கல் தள்ளப்பட்டிருக்கக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்! 


அன்பானவர்களே, எந்தக் கல் இயேசுவைக் கல்லறையில் பத்திரமாக வைத்திருக்கும் என்று எதிராளிகள் எண்ணினார்களோ, அதே கல் வெற்றியின் சின்னமாய் மாறிற்று; அதன்மேலே ஒரு தூதன் அமர்ந்திருந்தான்! இந்த வசனங்களில் நாம் ஒரு அருமையான பாடத்தைக் கற்கிறோம். நம் வாழ்விலே பல வேளைகளில் பலவித பிரச்சனைகள் வரும் என்று நினைத்து, எப்படியெல்லாம் கஷ்டம் அனுபவிக்க நேருமோ என பயந்து அடியெடுத்து வைக்கும்போது, கர்த்தர் அந்தக் கற்களைப் புரட்டிப்போட்டுவிட்டார் என்று காண்கின்றோம். வாழ்விலே வருகின்ற சில கற்களை நாமே புரட்டிவிடலாம். லாசருவின் கல்லறையில், கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார் இயேசு.  ஆண்டவரது வார்த்தை சொல்லும்போது சில தடைகளை நம்மால் அகற்றமுடியும். ஆனால், சில கற்களோ நம்மால் புரட்டமுடியாதபடி மிகவும் பெரிதாக இருக்கும். நமக்கு முன் இருக்கின்ற கல் எது? எப்படி அந்தக் கல்லை புரட்டிப்போட முடியும் என்று கவலைப்படுகிறோமா? இரவெல்லாம் தூங்காமல் நாளை வருகின்ற தடைகளை எப்படி நீக்குவது என்று பலவித திட்டங்கள் போடுகிறோமா? நாம் பயப்படவோ கலங்கவோ வேண்டாம். தேவனுடைய தூதன் முன்பதாகவே வந்து, தடைகளை அகற்றிப்போடுவான். எனவே, போகும் பாதையில் கற்களை எதிர்பார்த்து கலங்காமல், மிகப் பெரிய மலையையே அகற்ற வல்ல தேவனுடைய அளவற்ற வல்லமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுவோம்.

ஜெபம்:  ஆண்டவரே, அந்தக் கல்லை எவன் புரட்டுவான்? மலைபோன்ற என் பிரச்சனையை எப்படி அகற்றுவது? என்று கவலைப்பட்டு இன்றைய நாளின் சந்தோஷத்தை நான் இழக்கமாட்டேன். எதிர்காலத் தடைகளை நினையாது நான் முன்னேறி, நீர் கல்லை எப்படியும் புரட்டுவிடுவீர் என்று மகிழுவேன். ஆமென். 



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page