ஞாயிறு, ஏப்ரல் 13 || அவரது பணிக்கு நம்மைத் தேடுகிறார் கர்த்தர்
- Honey Drops for Every Soul
- 3 days ago
- 1 min read
வாசிக்க: லூக்கா 19: 28-38
... இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்!
- ஏசாயா 6:8
வேதாகமத்தில் இருக்கின்ற ஆச்சரியமான அறிக்கைகளில் ஒன்று லூக்கா 19:31ல் உள்ளது. ஆண்டவர் தமது சீஷர்களில் இருவரை கிராமம் ஒன்றிற்கு அனுப்பி, அங்கிருந்து ஒரு கழுதையைக் கொண்டுவரச்சொன்னார். யாராவது அவர்களிடம் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லும்படி சீஷர்களுக்கு தெளிவான அறிவுரையைக் கொடுத்தார் அவர். தேவனுக்கு எப்போதாவது ஏதாவது தேவையாயிருந்ததா? அவர் சங்கீதம் 50:9-12ல் சொல்லுவதாவது - உன் வீட்டிலிருந்து காளைகளையும் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்... பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே! ஆனால் ஆண்டவர் இயேசு, ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நமது நிமித்தம் தரித்திரரானார். (2 கொரிந்தியர் 8:9) எல்லாவற்றுக்கும் அவரே எஜமான், ஆனால் அவருடையது என்று ஒன்றுமே இல்லாதிருந்தது. பாவிகளை நமது உதவியேதுமின்றி இரட்சித்து, உலகில் தமது கிரியையை அவர் நிறைவேற்றியிருக்கலாம். ஆனாலும்கூட, பெலவீனரான நம்மை அதற்குக் கருவிகளாகத் தமது மகிமைக்கெனப் பயன்படுத்த அவர் தீர்மானித்தார்.
அன்பானவர்களே, சற்று யோசியுங்கள். தமது நோக்கத்தை நிறைவேற்ற பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருக்கு நாம் தேவை! சர்வவல்லவரும், யார்மீதும் சாராதவருமான அவர், தம்முடைய திட்டங்களை நிறைவேற்ற பெலவீன மனுஷீகரான நம்மைத் தெரிந்துகொண்டார். பிரான்சிஸ் அசிசியிடம், அவரால் எப்படி அத்தனைப் பெரிய காரியங்களைச் சாதிக்கமுடிந்தது என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: வானத்திலிருந்து கர்த்தர் பூமியைப் பார்த்து, மிகவும் பெவீனமான, மிகச் சாதாரணமான மனிதனை இவ்வுலகிலே எங்கே கண்டுபிடிப்பேன் என்று சொன்னார். அப்புறம் அவர் என்னைப் பார்த்தார். அவனை நான் கண்டுபிடித்தேன். அவன்மூலமாக நான் கிரியை செய்வேன் ... அவன் மிகவும் சிறியவனாயிருப்பதினால்தான் நான் அவனைப் பயன்படுத்துகிறேன் என்று அறிந்துகொள்வான் என்றார். நமக்கு மிஷனரிப் பணியை வைத்திருக்கிறார் கர்த்தர். அதை நாம்தான் செய்யவேண்டும் - அது கட்டுமானப் பணி, ஆசிரியப் பணி, சுகமாக்கும் பணியாக இருக்கலாம். அவருக்குத் தேவைப்பட்டால் உடனே செல்வதற்கு தயாராயிருப்போம். எதற்காக வேண்டுமானாலும் அவர் நம்மைக் கூப்பிடுவார்!
ஜெபம்: ஆண்டவரே, மகிமையின் ராஜாவான உமது பணியை நிறைவேற்ற ஒரு கழுதை தேவையாயிருந்தது. உமது நாம மகிமைக்காக அதைப் பயன்படுத்தினீர். உம் பணி எதுவானாலும் செய்ய நான் தேவைப்பட்டால், உடனே வருவேன். உம்மால் பயன்படுத்தப்படுவதையே என் மகிமையாகக் கருதுகிறேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments