top of page

ஞாயிறு, ஏப்ரல் 06 || உங்கள் பணியை மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்




எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ...   - சங்கீதம் 90:17



பலர் தங்களுடைய வேலைகளைப் பிரியத்துடன் செய்வதில்லை; கர்த்தருக்கென்று பணியாற்ற இதைக்காட்டிலும் பெரிய வேலை கிடைத்தால் நல்லது என்று விரும்புவார்கள். பெரிய பணி எங்கிருந்து தொடங்குகிறது தெரியுமா? ஸ்தேவான் பற்றி அப்போஸ்தலர் நடபடிகள் மூலமாக நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்; அவர் முதல் இரத்தசாட்சியாய் இருந்ததே இதற்குக் காரணம். ஆனால், அவர் எப்படிப் பரிசுத்த ஆவியால் நிறைந்த சிறந்த பிரசங்கியாக ஆனார்? அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி - ஆதித் திருச்சபையிலுள்ள கிரேக்க, யூத விதவைகளுக்கு உணவு மற்றும் பணமும் கொடுக்கின்ற பணியை மேற்பார்வையிடுவதே. இத்தகைய பணியை அநேகர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், தாழ்மையான, மிகவும் எளிய பணியைச் செய்ய ஸ்தேவானுக்கு இருந்த ஆர்வம்தான், பின்னாட்களில் பெரிய இரத்தசாட்சியாய் மாற அவருக்கு வாய்ப்பளித்தது. அற்புதங்களைச் செய்ய, பெரிய பிரசங்கியாக மாற விரும்பாமல், தன் ஆண்டவருக்கு விசுவாசத்துடன் ஊழியம்செய்ய இருதயத்தைத் திருப்பினார் ஸ்தேவான். கர்த்தருக்கென்று மாபெரும் ஊழியத்தைத் தான் செய்யவேண்டும் என அவர் ஆசைப்பட்டிருந்தால், இந்தப் பந்திவிசாரிப்பின் பணியைச் செய்ய அவருக்கு விருப்பமே இருந்திருக்காது. எலிசபெத் எலியட், என் கணவர் எலியட் மரித்த பிறகு, அந்தக் காட்டிலுள்ள மிஷனரிப் பணித்தளத்தில் வேறு எந்த மிஷனரியும் இன்றி, நான் மட்டும் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் மிக அதிகமான வேலைகள் இருக்கும். பத்து மாதக் கைக்குழந்தை எனக்கு இருந்தது, வீட்டையும் நான் கவனிக்கவேண்டும், மொழியாக்கப் பணியும் செய்யவேண்டும். ஆக்கா இந்தியர்களுக்கு பல வழிகளில் சேவை செய்யவேண்டும் அவர்களுக்குக் கற்பிக்கவேண்டும், மருத்துவப்பணியும் செய்ய வேண்டும், சபைக்கும் பள்ளிக்கும் உதவி செய்யவேண்டும். என் பணி ஆசீர்வாதமாய் இருந்தபடியால், கர்த்தரின் சித்தத்தைச் செய்வதிலேயே நான் இளைப்பாறுதலை, புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொண்டேன் என்று ஒருமுறை கூறினார். 


அன்பானவர்களே, நமக்குக் கர்த்தர் தந்துள்ள பணிக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம். அவரிடமிருந்து நாம் பெற்ற ஈவு என அதை ஏற்று, அதையே அவருக்குக் காணிக்கையாகத் திரும்பச் செலுத்துவோம். அவர் தந்த பணியை மனுஷருக்காக அல்ல, தேவனுக்கென விசுவாசத்துடன் மனப்பூர்வமாகச் செய்து முடிப்போம். 
ஜெபம்: ஆண்டவரே, நீர் தந்த பணியை உமது ஈவாக ஏற்றுக்கொள்வேன். அதை மனப்பூர்வமாய், விசுவாசத்துடன் முழுமூச்சாய்ச் செய்வேன். எளிய உலகப் பணியாயிருந்தாலும் உமக்காக அதைச் செய்வேன். சின்ன வேலையில் நான் உண்மையாயிருந்தால், உம் மகிமைக்காக ஏற்ற நேரம் என்னை உயர்த்துவீர்.ஆமென்.



தெளிதேன் துளிகள்

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page