top of page

ஞாயிறு, அக்டோபர் 27

வாசிக்க: லூக்கா 10:38-43


இன்று தேவனுக்கு நேரம் கொடுத்தீர்களா?


உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.- சங்கீதம் 119:27

வேதம் கர்த்தர் நமக்குத் தந்த பெரிய ஈவு. வேதத்தை முறையாகப் படிக்க மூன்று விதிகளை நாம் பின்பற்றவேண்டும்.


முதலாவது, வேதத்தைப் படிக்கும்போது நமக்கு திறந்த உள்ளமும், உண்மையும் தேவை. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்தோடு படித்தால், அது நமக்குப் பிரயோஜனமாயிருக்காது. ஆனால், தாழ்மையுடனும், கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உண்மையான தாகத்துடனும் வேதத்தை நாம் வாசித்தால் நிச்சயம் ஆண்டவர் நமக்கு அநேக காரியங்களை வெளிப்படுத்துவார். (மத்தேயு 7:7,8)

இரண்டாவதாக, நமது சித்தத்தை முற்றிலும் கர்த்தரிடம் அர்ப்பணித்தவர்களாய் நாம் வேதத்தை வாசிக்கவேண்டும். அதாவது, நமது பரம தகப்பனிடம், ஆண்டவரே, என் சித்தமல்ல, உம் சித்தப்படியே ஆகக்கடவது என்று சொல்கிற மனப்பக்குவம் நமக்கு வேண்டும். நாம் முழுமனதோடு அவரது சித்தத்திற்கு நம்மைக் கீழ்ப்படுத்தவேண்டும் என கர்த்தர் எதிர்பார்க்கிறார். வெளிப்படுத்தப்பட்ட அவரது சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் போவதுதான் உலகத்தில் இன்று நிலவும் ஆவிக்குரிய அந்தகாரத்திற்கு முக்கிய காரணமாயிருக்கிறது. எனவே, வேதத்தை நாம் வாசிக்கும்போது கர்த்தர் நமக்கு என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்வதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.

மூன்றாவதாக, நாம் முழு விசுவாசத்தோடும் வேதத்தை வாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6, தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலனளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் எனக் கூறுகிறது. எனவே, நாம் அவரையும் அவரது வார்த்தையையும் விசுவாசிப்பது மட்டுமல்ல, முழுவதுமாக நம்பவேண்டும் என்றும்  கர்த்தர் விரும்புகிறார். இப்படிப்பட்ட  விசுவாசம் நமக்கிருக்குமானால் அவரது இருதயம் அகமகிழும். 


அன்பானவர்களே, அனுதினமும் வேதத்தை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் நமக்கு இருக்கவேண்டும். ஒரு தனிமையான இடத்தைத் தெரிந்துகொண்டு, வேதத்தை தேவபயத்தோடும், விசுவாசத்தோடும், நடுக்கத்தோடும் வாசிக்கவேண்டும். இப்படிப்பட்ட தனிமையான அமைதி நேரத்தை நாம் தினசரி வழக்கமாக்கிக்கொள்வது மிகவும் அவசியம். யாக்கோபு 4:8, தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார் என்று கூறுகிறது. முழுமனதோடு வேதவார்த்தையை விசுவாசித்து, அனுதினமும் அதை வாசித்து கீழ்ப்படிவதே தேவனைத் தேடுவதற்கு அடையாளம். இன்று நீங்கள் ஆண்டவருக்கு உங்கள் அமைதி நேரத்தைக் கொடுத்தீர்களா? அவரைத் தேடினீர்களா?  

ஜெபம்: ஆண்டவரே, நான் வேதத்தைத் திறக்கையில் எனது இருதயத்தையும் கண்களையும் நீர் திறந்தருளும். வேதத்தின் மூலம் என்னோடு நீர் பேசுவதைக் கேட்டு, கீழ்ப்படிய  கிருபை தாரும். உம் வாக்குத்தத்தங்களை நம்பி ஜீவிக்க, தினமும் உம்முடன் அமைதியாய் நேரம் செலவிட கிருபை தாரும். ஆமென்..
 

அன்பானவர்களே


இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12  மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து,  இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம்.  நீங்கள் எந்த அரை மணி  நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும்.  நன்றி.

அலுவலக தொடர்பு எண் - 9444456177.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 


கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான, 

சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்



 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page