உங்கள் குறைகளோடே இயேசுவுக்கு நீங்கள் தேவை!
அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு ... (மாற்கு 3:14)
இயேசுவின் சீஷர்கள் நன்கு படித்த மேதைகள் அல்ல. அவர்கள் ஞானவான்களோ, ஐசுவரியவான்களோ, மிகப் பிரபலமானவர்களோ அல்ல. அவர்களில் பெரும்பாலோர் கல்வியறிவில்லாத, சாதாரண மீனவர்கள்தான். அவர்களுக்கு பல்வேறு குறைகள் இருந்தன.
முதலாவது, அவர்களுக்கு எதையும் புரிந்துகொள்ளும் திறமை குறைவாகவேயிருந்தது. பரிசேயர்களின் புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று அவர்களுக்கு இயேசு சொன்னபோது, தாங்கள் அப்பத்தைக் கொண்டுவர மறந்துபோனதைக்குறித்துதான் அவர் தங்களைக் கடிந்துகொள்கிறார் என நினைத்தார்கள். அவர்களது அறியாமையைக் கர்த்தர் கண்டு, நீங்கள் இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? என்று அவர்களைக் கடிந்துகொண்டார். இரண்டாவதாக, அவர்களிடத்தில் தாழ்மை குணம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர்கள் தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று ஒருமுறை வாக்குவாதம் செய்தார்கள். (மாற்கு 9:33,34) மூன்றாவதாக, விசுவாசத்திலும் அவர்கள் குறைவுடையவர்களாயிருந்தார்கள். ஒருமுறை அவர்கள் படவில் பயணம் செய்தபோது, புயல் வந்தது. இயேசு அவர்களோடுதான் இருந்தார். அவர்களோ அதை சற்றும் உணராமல் மரண பயத்தில் அலறினார்கள். இயேசு அவர்களை நோக்கி, ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்று கேட்டார். (மாற்கு 4:40) நான்காவதாக, அர்ப்பணிப்பில் அவர்கள் குறைவுபட்டார்கள். கெத்செமனே தோட்டத்திலிருக்கையில் கைகளில் தடியோடும் பட்டயங்களோடும் ஒரு கும்பல் இயேசுவைப் பிடிக்க வந்தபோது அவர்கள் எல்லோரும் அவரைவிட்டு ஓடிவிட்டார்கள். (மாற்கு 14:50) இந்தக் குறைபாடுகளுக்காக இயேசு அவர்களை தள்ளிவிடவில்லை. மாறாக அவர்களை உற்சாகப்படுத்தினார், அவர்களுக்காக ஜெபித்தார், தம்மையே அவர்களுக்கு மாதிரியாகக் காண்பித்தார்.
அன்பானவர்களே, தம்முடைய ராஜ்ஜியத்தின் பணிசெய்ய இயேசுவுக்கு நாம் தேவை. நம்முடைய கல்வி மற்றும் பொருளாதார நிலையைக் குறித்து நாம் கவலைகொள்ள வேண்டாம். கர்த்தர் நம்மிடம், அர்ப்பணிப்புடன் அவருக்கு ஊழியம் செய்வதையே எதிர்பார்க்கிறார். அவருடைய பணிக்காக நம்மை பயன்படுத்த அவரிடம் நம்மை அர்ப்பணிப்போம்.
ஜெபம்: பரலோக பிதாவே, நான் குறைவுள்ளவனாயிருந்தும் உமக்கு ஊழியம் செய்யும் கிருபையைக் கொடுத்திருக்கிறீர். எனக்குப் பேசத்தெரிவதில்லை; என் தாலந்துகளும் மிகக்குறைவே. ஆனாலும் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என்னை ஏற்றுக்கொண்டு பயன்படுத்தும். ஆமென்.
அன்பானவர்களே
இந்த மாதம் நம் சங்கிலித்தொடர் ஜெபம் நடைபெறும். அது அக்டோபர் 28ம் தேதி திங்கள் மதியம் 12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 29ம் தேதி செவ்வாய் மதியம் 12 மணியில் முடிகிறது. நம் இருதயங்களை ஜெபத்தில் ஒன்றாக இணைத்து, இந்த ஊழியத்துக்காகவும், நமது தேசத்துக்காவும் மற்ற பல காரியங்களுக்காகவும் ஜெபிப்போமாக. உங்கள் பெயர்களை வாட்ஸ் ஆப் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ எங்களுக்குத் தெரிவிக்கலாம். நீங்கள் எந்த அரை மணி நேரத்தை ஜெபத்திற்கு தெரிந்து கொண்டீர்கள் என்பதையும் தெரிவிக்கவும். உங்களுக்கு ஜெபக்குறிப்புகள் அனுப்பி வைக்கப்படும். நன்றி . அலுவலக தொடர்பு எண் - 9444456177.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கிறிஸ்துவின் பணியில் உங்கள் அன்பான,
சகோ. சாமுவேல் பிரேம்ராஜ், சகோதரி மஞ்சுளா பிரேம்ராஜ்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments