கிறிஸ்து நம் வாழ்வின் அஸ்திபாரமாயிருக்கிறாரா?
நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்... - 2 கொரிந்தியர் 13:5
தமது வார்த்தையைக் கேட்பவனாக மட்டுமல்ல, தமது சித்தத்தின்படி செய்பவனாகிய மனுஷனைப்பற்றி இயேசு கூறுகிறார். கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு தன் வீட்டைக் கட்டினவனுக்கு அவனை ஒப்பிட்டுப்பேசுகிறார் இயேசு. பாறையில் அஸ்திபாரமிடுவதற்கு அவன் தன் சுயத்தை வெறுத்து, கஷ்டத்துடன் உழைத்திருப்பான். தான் கட்டுகின்ற வீடு உறுதியாய் நிற்கும்படிக்கு, மிகவும் ஆழமாகத் தோண்டி, கற்பாறையில் அஸ்திபாரத்தை வைத்திருப்பான். கற்பாறையின் மேல் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒப்பாகவே தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிகிற மனுஷன் இருப்பான். துன்பங்கள் பிரவாகம்போல் வந்தாலும், உபத்திரவங்கள் வெள்ளம்போல் அடித்தாலும், விழுந்துவிடாமல் அசையாமல் நிற்கும். ஆனால் வருந்தத்தக்க காரியம், கிறிஸ்துவின் போதனைகளைக் கேட்டும், அவற்றுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பவனது விசுவாசம். மணலின்மேல் கட்டப்பட்ட அஸ்திபாரமில்லாத வீட்டுக்கு இந்த மனுஷனை ஒப்பிடுகிறார் இயேசு. இந்த இருவருக்கும் வெளிப்படையாக எந்த வித்தியாசமும் தெரியாது. இருவரும் ஒரே விசுவாசத்தை அறிக்கையிடுவார்கள். ஆனால், துன்ப நேரங்களில், வெறுமனே வெளியே விசுவாசத்தைக் காண்பிப்பவர்கள் நிச்சயமாகவே நிலைகுலைந்துவிடுவார்கள். அஸ்திபாரமற்ற வீட்டின்மேல் பெருங்காற்றும், புயலும் மோதுகையில், சுமுக சூழ்நிலையாம் சூரிய ஒளியில் அழகாகத் தோன்றும் சுவர்கள், இடிந்துவிழும். நிச்சயம் பெரும் நாசம் உண்டாகும்.
அன்பானவர்களே, நாம் எத்தகையை அஸ்திபாரத்தில் நம் வீட்டைக் கட்டுகிறோம்? நம் விசுவாசம், வார்த்தையால் சொல்லப்படுகிற விசுவாசமாக இல்லாமல், உண்மையாய் கிறிஸ்துவில் வைக்கின்ற இருதயபூர்வ நம்பிக்கையோடுகூடிய விசுவாசமாக இருக்கிறதா? இயேசுவோடுள்ள உறவு நம்முடைய வாழ்வை மாற்றியிருக்கிறதா? நம் வாழ்வின் அஸ்திபாரத்தையும், அனுதினமும் நாம் அதன்மேல் கட்டுகின்ற வாழ்வையும் இயேசு பரிசோதிக்க விரும்புகிறார். கிறிஸ்துவின் குரலை நாம் கேட்டு, அவர்பின் சென்றால், வெள்ளம் புரண்டாலும், புயலடித்தாலும், நம் வாழ்க்கை, விழுந்துவிடாமல் உறுதியுடன் நிற்கும்!
ஜெபம்: ஆண்டவரே, நான் மணலின்மேல் வீட்டைக்கட்டும் மூடன் போலிருக்க மாட்டேன். என் வெறும் உதடுகளால் விசுவாசத்தைக் கூறாமல், வெளியேயும் உள்ளேயும் விசுவாசத்துக்கு சாட்சியாயிருப்பேன். என்னை ஏமாற்றிக்கொண்டு, இறுதி நாளின் பரீட்சையில் தோற்று, ஆத்துமாவை வீணாக்கமாட்டேன். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments