சனி, மார்ச் 29 || தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்யவேண்டாம்!
- Honey Drops for Every Soul
- Mar 29
- 1 min read
வாசிக்க: எரேமியா 36: 1-3, 22-32
... தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை .- ஓசியா 4:1
தேவனை மற்றும் அவரது வார்த்தையை மதிக்காமல்போனவர்களின் கதி என்னவாயிற்று என்று வேதம் பலமுறை கூறி நம்மை எச்சரிக்கிறது. யோசியாவின் குமாரன் யோயாக்கீம் அரசாண்ட நாட்களில் தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு மக்கள் திரும்பவேண்டும் என கர்த்தர் எச்சரித்தும் அவர்கள் அதைக் கேளாமல்போனார்கள். யோசியாவின் காலத்திலிருந்து இஸ்ரவேலைக்குறித்தும் யூதாவைக்குறித்தும் கர்த்தர் எரேமியாவிடம் பேசிய யாவற்றையும் ஒரு புஸ்தகச்சுருளில் எழுதி அனுப்பக் கர்த்தர் கட்டளையிட்டார். அதன்படியே யோயாக்கீமிடம் அதை அனுப்பியபோது, யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்ததும், ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து முழுதும் எறிந்துபோகும்படி கணப்பில் போட்டான். கர்த்தரின் வார்த்தைகளுக்குப் பயப்படாமல், அவர் காண்பித்த அன்பை அவர்கள் அசட்டை செய்தது எத்தனை துணிகரம்!
அன்பானவர்களே, இதன் விளைவாக கர்த்தரின் கோபாக்கினை அவர்கள்மேல் வந்தது. தாம் முன்பு கூறியதைவிட அதிக தண்டனையை அவர்கள்மேல் வரும்படி கர்த்தர் செய்தார். விசேஷமாக, யோயாக்கீம் அப்படி தேவ வார்த்தையை துச்சமாக மதித்தபடியால், தாவீதின் சிங்காசனத்தில் அமர்வதற்கு ஏற்ற ஒருவனும் அவனது வம்சாவளியில் வருவதில்லை என்ற சாபம் அவன்மேல் வந்தது. மேலும் அவனது உடல் வெளியில் தூக்கிப்போடப்பட்டு பகலின் உஷ்ணத்திலும் இரவின் பனியிலும் நனையும் என்ற சாபமும் பலித்தது. இந்த தண்டனை கொடிதல்லவா? கர்த்தரின் வார்த்தையை அவன் மதிக்காமல் போனதே இதற்குக் காரணம். இன்று நாம் கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, மதித்து நடக்கிறோமா அல்லது முரட்டாட்டத்துடன் அவரது வார்த்தையை அசட்டை செய்கிறோமா? சற்று யோசித்துப் பார்ப்போம். வார்த்தையை மதிக்கிறவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் உதாசீனப்படுத்துகிறவர்களுக்கு கோபாக்கினையையும் கர்த்தர் வைத்திருக்கிறார். எனவே, ஞானமாய் நடந்துகொள்வோம்.
ஜெபம்: ஆண்டவரே, உமது வார்த்தையை அசட்டை செய்வதால் வரும் விளைவை இன்று அறிந்தேன். எப்போதும் உமது வார்த்தையை மதித்து அதன்படி என் வாழ்வை நடத்த கிருபை தாரும். பயத்துடன் நடுக்கத்துடன் உம் வார்த்தையை நடைமுறைப்படுத்த ஆவியின் அனுக்கிரகம் தாரும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments