சனி, நவம்பர் 30 || தெளிதேன் துளிகள்
- Honey Drops for Every Soul
- Nov 30, 2024
- 1 min read
வாசிக்க: நெகேமியா 6:15-16
நிந்தை அவமானமா? துணிவுடன் மேற்கொள்ளுங்கள்!
அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன... பலியிடுவார்களோ... கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ... - நெகேமியா 4:2
நம்பிக்கையற்ற நிலை நம் வாழ்வில் ஏற்படும்போது எதைச் செய்தாலும் இழந்ததை மீண்டும் பெறமுடியாது என்று நினைத்து விட்டுவிடுகிறோம். ஆனால், நெகேமியாவின் புத்தகத்தை வாசிக்கும்போது கர்த்தருடைய உதவி நமக்குக் கிட்டுமானால், நாமும் ஒற்றுமையோடு செயல்படுவோமானால் பழைய நிலையை மீட்டுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை நமக்கு வருகிறது. இடிந்துபோன அலங்கத்துக்கு நெகேமியா செய்தது என்ன? முதலாவது, கண்ணீருடனும் தாழ்மையுடனும் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து அவரிடம் உதவிகேட்டு விண்ணப்பம் பண்ணினான். இரண்டாவதாக, அலங்கத்தைக் கட்டத் தேவையானவற்றைத் திரட்ட தன் மக்களிடமும், ராஜாவிடமுமிருந்து பொருளுதவிகளையும் பெற்றான். மூன்றாவதாக, எருசலேமுக்குச் சென்று இழப்பின் தன்மையை அளந்து, செய்யவேண்டியதைத் திட்டம் பண்ணினான். அதற்குப் பிறகும் காரியம் சுலபமாக முடியவில்லை. சன்பல்லாத், அந்த பலவீனமான யூதர்கள் என்ன செய்கிறார்கள், இந்த வேலையை ஒரே நாளில் அவர்கள் முடிப்பார்களோ? என்று அவர்களை கேலிசெய்து, அவர்களை மனமடிவாக்கினான். ஆனால் நெகேமியா, அசையாமல் கர்த்தருடைய வேலையைத் தொடர்ந்தான். ஒவ்வொரு குடும்பத்திற்குரிய வேலையையும் இடத்தையும் அவரவர்களுக்கு குறித்துக்கொடுத்தான். ஐம்பத்திரண்டே நாட்களில் அவர்கள் அதைச் செய்துமுடித்து சாதனை படைத்தார்கள். எப்படி இது நிகழ்ந்தது? கர்த்தர் அவர்களோடிருந்து உதவி செய்தார்; தலைவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்; மக்களும் ஒற்றுமையாக இருந்து ஒருமனிதனைப்போல எழுந்து கட்டினார்கள்; வெற்றி பெற்றார்கள்.
அன்பானவர்களே, நாமும் கர்த்தரின் துணையோடு இப்போதிருக்கிற நிலைமையை மேற்கொண்டு வெற்றி பெறுவோம். அவரது வாக்குத்தத்தங்களைப் பிடித்துக்கொண்டு அயராமல் உழைப்போம்.
ஜெபம்: தேவனே, மற்றவர்களால் நிந்திக்கப்படும்போதும், உற்சாகமிழக்கச் செய்யப்படும்போதும், கவலைப்பட்டு ஒடுங்கிப்போகாமல், உமது உதவியைத் தேடி ஜெபித்து சோர்வில்லாமல் உழைக்க உமது ஆவியின் பலத்தைத் தாரும். இறுதிவரை தரித்திருந்து ஜெயம் பெற கிருபை தாரும். ஆமென்
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments