வாசிக்க: அப்போஸ்தலர் 6:1-8
ஜெபத்தை அசட்டை செய்யாதீர்கள்!
... ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். - ரோமர் 12:12
இன்றைய வேதப்பகுதியில், தங்கள்மேல் விழுந்திருந்த அநேக கடமைகளால் தங்களது ஜெபநேரம் பறிபோனதையும், அதினிமித்தம் தாங்கள் ஜெபத்தில் குறைவுபட்டுப்போனதையும் அப்போஸ்தலர்கள் உணர்ந்ததைக் குறித்து வாசிக்கிறோம். எனவே அவர்கள், இப்படிப்பட்ட தடைகளை அகற்றிவிட்டு ஜெபத்திற்கும் வேதவசனத்திற்கும் முழுமையாக நேரம் கொடுக்க வாஞ்சித்து ஒரு திட்டமான முடிவெடுத்தனர். பந்தி விசாரணை மற்றும் பணத்தின் காரியங்களை, பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்த, விசுவாச வீரர்களிடம் ஒப்படைத்தனர். அப்போஸ்தலர்கள் ஜெபத்திலும் வேதவசனத்தைப் போதிப்பதிலும் தரித்திருக்க இந்த முடிவு அவர்களுக்கு உதவி செய்தது.
அன்பானவர்களே, நாமும் பலமுறை இப்படிப்பட்ட சில நியாயமான காரியங்கள் நமது ஆவிக்குரிய வாழ்வில் குறுக்கிடுவதை உணர்கிறோம். இவை அதிகமான நேரத்தை எடுத்துவிடுவதால் நம்மால் ஜெபத்திற்கும் வேதவாசிப்பிற்கும் சரியாக நேரம் கொடுக்கமுடிவதில்லை. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு நேரம் எங்கே கிடைக்கிறது என்று சொல்லி ஜெபநேரத்தை நாம் அசட்டை செய்துவிடுகிறோம். பெரும்பாலும் நமது ஜெப அறை மூடியே கிடக்கிறது. இதை நாம் உணருகிறோமா? அப்போஸ்தலர்கள் தங்கள் தவற்றை உணர்ந்தது எப்படி? எவ்வளவுதான் தாங்கள் முயற்சி செய்தும் சபையாரைத் தங்களால் திருப்தி செய்யமுடியவில்லை என்று அவர்கள் கண்டார்கள். மேலும், அவர்கள் நன்றியுடையவர்களாய் இருப்பதற்குப் பதில் முறுமுறுக்கிறவர்களாகவும், குறைசொல்கிறவர்களாகவும் மாறுவதைக் கண்டார்கள். ஆகவே, இதற்கெல்லாம் காரணம் ஜெபக்குறைவே என உணர்ந்தார்கள். உடனே, ஜெபத்திற்கு முன்னுரிமை தர முடிவெடுத்தார்கள். நாமும் இப்படியே செய்யவேண்டியது அவசியம். நமது ஜெப நேரத்தை நாம் அசட்டை செய்யும்போது நமது வாழ்விலும் அதிருப்தி ஏற்பட்டு சமாதானம் குறைவுபடுவதை நாம் உணர்வோம். நமது முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீரைப்போல ஆகிவிடுவதை நாம் காண்போம். அப்படிப்பட்ட சமயங்களில், நாம் உடனே தகுந்த நடவடிக்கை எடுக்காமல் போனால் நாம் நமது வாழ்வில் தோல்விக்குமேல் தோல்வியைச் சந்திக்க நேரிடும். எனவே, இனியாவது கர்த்தருக்கு நமது ஜெபநேரத்தைக் கொடுத்து அவருடன் அதிக நேரம் செலவிட முடிவெடுப்போம். வெற்றி காண்போம்.
ஜெபம்: தேவனே, எனக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்படுகையில் அவற்றில் நான் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டு எனது ஜெபவேளை மற்றும் அமைதி வேளையைக் குறைக்கிறேன் அல்லது முழுமையாக விட்டுவிடுகிறேன். கிருபையாக மன்னித்து இனி ஜெபத்துக்கு முதலிடம் கொடுக்க உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments