வாசிக்க: சங்கீதம் 146: 1-10
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி!
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; ... எபேசியர் 1: 3
அல்லேலூயா சங்கீதங்கள் என்ற தலைப்பை உடைய ஐந்து சங்கீதங்களில் இது முதலாம் சங்கீதம். இந்த சங்கீதங்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் திரும்பி வரும் நேரத்தில் எழுதப்பட்ட சங்கீதங்கள் இவை என்று கருதுகின்றனர் வேதவல்லுனர்கள். தங்கள் சொந்த தேசத்துக்குக் கொண்டுவந்த தேவனின் கிருபையைக் கொண்டாட, அவருடைய நாமத்தின் மகிமைக்காக எழுதப்பட்ட சங்கீதங்கள் இவை. ஆகவே, இந்த ஐந்து சங்கீதங்களும் அல்லேலூயா என்று தொடங்குகிறது, அல்லேலூயா என்று முடிகிறது! இது, கர்த்தரைத் துதி என்பதன் எபிரெய வார்த்தை. இந்த சங்கீதத்தின் வசனங்கள் 1, 2ல், சங்கீதக்காரன் தனது ஆத்துமாவைக் கூப்பிட்டு, கர்த்தரைத் துதி என்று கூறுகிறான். தன் நாசியில் சுவாசம் இருக்குமட்டும் தான் கர்த்தரைத் துதிக்கப்போவதாக அவன் கூறுகிறான். இயேசுவின் இரத்தத்தாலே நாம் இரட்சிப்படைந்திருந்தால், நம் வயது, சுகவீனம், பாடுகள், வருத்தங்கள் எதுவுமே நாம் ஆண்டவரைத் துதிப்பதைத் தடுக்கமுடியாது. அவரது கிருபையினால் நம்மை அவரது பிள்ளைகளாக அவர் சுவீகரித்து, இயேசுவுக்குள் என்றும் பத்திரப்படுத்துகிறார். எனவே, சூழ்நிலைகளனைத்தும் எப்படி இருந்தாலும், தன் வாழ்வின் எல்லா நாளிலும் தான் தேவனை துதிக்கப்போவதாகக் கூறுகிறான் சங்கீதக்காரன். தேவனை நாம் துதிப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது சிலவேளைகளில் மிக கடினம். ஆனால், எல்லாவற்றிலேயும், அவை பிரதிகூலமாய் இருந்தாலும் ஸ்தோத்திரஞ்செய்ய நாம் ஊக்குவிக்கப்படுகிறோம். (1 தெசலோனிக்கேயர் 5:18) வல்லமையின் மகத்துவம் மற்றும் வாக்குத்தத்தத்தின் மகத்துவம் இரண்டிலும் விசேஷித்த வகைகளில் வெளிப்படுகின்ற அவரது மகத்துவத்துக்காக நாம் தேவனைத் துதிக்கவேண்டும். அவருடைய வல்லமையானது அற்புதமும் அளவுக்கடங்காததுமாய் இருக்கிறது. நாம் அவரில் நம்பிக்கை வைத்தால், அவருடைய வல்லமை நம்மில் தரிப்பிக்கப்படுகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் நம்பிக்கைக்குரியதாக இருப்பதால் அவருடைய வார்த்தையை எப்போதும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
அன்பானவர்களே, தங்கள் சொந்த தேசத்துக்கு திரும்பிவரச் செய்த தேவனை யூத மக்கள் துதிக்கின்றபோது, நம்முடைய பாவத்தினால் வரும் கோபாக்கினையிலிருந்து நம்மை மீட்ட தேவனை நாம் எவ்வளவு அதிகமாகத் துதிக்கவேண்டும்!
ஜெபம்: ஆண்டவரே, எல்லா சூழ்நிலைகளிலும் துதி எனது இருதயத்திலிருந்து பொங்கட்டும். எந்த சூழ்நிலையும் என் ஆவியை மந்தப்படுத்தாதபடி, சத்தத்தை உயர்த்தி என் மீட்பரான உம்மைத் துதிப்பேன். எனக்கு நீர் இரக்கம் பாராட்டினீர். நான் என்றும் உம்முடையவன்! உம்மை நான் துதிப்பேன் ஆண்டவரே! ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments