வாசிக்க: 2 நாளாகமம் 10: 8-14, 11: 1-4
சூழ்நிலைகளால் அசைக்கப்படாதிருங்கள்
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.- நீதிமொழிகள் 19:20
தகப்பன் சாலொமோன் மரித்தபின்பு, ரெகோபெயாம் இஸ்ரவேலின் ராஜாவானான். இஸ்ரவேலர் அவனை அணுகி, அவன் தகப்பன் சாலொமோன் தங்கள்மீது வைத்த பாரமான நுகத்தை லகுவாக்கும்படிக் கேட்டபோது, ரெகோபெயாம் வாலிபரோடே ஆலோசனைபண்ணி அதன்படியே செய்தான். பாரத்தை லகுவாக்காமல் இன்னுமதிக பாரத்தைச் சுமக்கும்படி செய்ய முடிவெடுத்தான். எனவே, வடபகுதியிலிருந்த பத்து இஸ்ரவேல் கோத்திரங்கள் அவனுக்கெதிராக கலகம் பண்ணினர். அதற்குப் பதிலடியாக, ரெகோபெயாம் யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய லட்சத்து எண்பதினாயிரம்பேரை கூட்டி இஸ்ரவேலருடன் யுத்தம்பண்ணி அவர்களைத் தம்மிடம் திரும்பப்பண்ணி ராஜ்யத்தைத் தன்னிடமாய் திருப்பிக்கொள்ள நினைத்தான். ஆனால், தன் யுத்தவீரரை அவன் வடக்குநோக்கி நகர்த்துவதற்கு முன்பாக செமாயா என்ற தேவனது தீர்க்கதரிசி, தேவ வார்த்தையை அவர்களிடம் கொண்டுவந்து, நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள் என்று கூறினான். இதனை ரெகோபெயாம் கேட்டவுடன் பின்வாங்கி, அந்த லட்சத்து எண்பதினாயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டான். தீர்க்கதரிசியின் ஆலோசனையை ரெகோபெயாம் மறுபேச்சின்றி ஏற்றுக்கொண்டது ஆச்சரியமே! செமயாவின் வார்த்தையின்படி ஞானமுடன் செய்தான் ரெகோபெயாம். ஆனால், இது மட்டும் ரெகோபெயாமின் வாழ்க்கை அல்ல. ரெகோபெயாம் ராஜ்யத்தை திடப்படுத்தி தன்னைப் பலப்படுத்திக்கொண்டு, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டான் என்று 2 நாளாகமம் 12:1 கூறுகிறது. மேலும், புறஜாதியார் தேவர்களை பின்பற்றத் தொடங்கினான்.
அன்பானவர்களே, இருமனமுள்ளவனும் தன் வழிகளில் நிலையற்றவனுமாயிருக்கின்ற மனுஷனுக்கு சரியான உதாரணம் ரெகோபெயாம். (யாக்கோபு 1:8) ஆரம்பத்தில் அவனுடைய தலைமைத்துவத்தின் கீழ் ஜனங்கள் தேவனைப் பின்பற்றினர்; ஆனால் அவன் தேவனை விட்டுவிட்ட பிறகு அவனது ராஜ்யம் சரியத் தொடங்கிற்று. தேவனை விடாமல் பற்றிப்பிடிக்க நாம் கவனமாயிருந்து, முடிவுவரை அவருக்கு விசுவாசமாயிருப்போம்.
ஜெபம்: ஆண்டவரே, முன்பு மூடரான இளைஞரின் ஆலோசனையைக் கேட்ட ரெகோபெயாம், பின்பு செமயாவின் சொல்லுக்கு செவிமடுத்து ஞானமாக நடந்தான். ஆனால் நியாயப்பிரமாணத்தை விட்டு, சிலைகளைப் பின்பற்றினான். நான் தீய ஆலோசனை கேளாமல், என்றும் உம்மைப் பற்றிக்கொள்வேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comentários