வாசிக்க: எரேமியா 8: 4-12 தெளிதேன் துளிகள்
ஆகாயத்துப் பறவைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்
ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்.. என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள். (எரேமியா 8:7)
இஸ்ரவேல் மக்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்மாற்றம் அடைந்தனர். அவர்கள் மாயையைப் பின்பற்றி, தேவனிடம் திரும்ப மறுத்தார்கள். 7ம் வசனத்தில் எரேமியா ஆகாயத்துப் பறவைகளின் உதாரணத்தைக் கூறுகிறான். ஜனங்களின் வெட்கக்கேடான செயல்களைக் கண்டித்து அவர்கள் பறவைகளைக் காட்டிலும் குறைந்த ஞானமுடையவர்கள் என்றும், புரிந்துகொள்ளும் ஆற்றலற்றவர்கள் என்றும் கூறினான். நாரை, காட்டுப்புறா, கொக்கு, தகைவிலான் குருவி ஆகியவற்றைவிட அவர்கள் மதியற்றவர்கள் என்றும் அவன் கூறினான். இது மிகவும் கடின கண்டனமாய் நமக்குத் தெரியலாம்; அவர்கள் பல தீமைகளைச் செய்து மிகவும் கடினப்பட்டிருந்ததால் அவ்விதமான குற்றஞ்சாட்டுதல் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. நாரைகள் ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு இடம்பெயர்வதற்கான நேரத்தை அறிந்திருக்கின்றன. அவைகள் குளிர்காலத்தின் கடும் குளிரிலிருந்து தப்பிக்கும்படி குளிர்பிரதேசங்களை விட்டு வெப்பமான காலநிலையை நாடிச் செல்கின்றன; திரும்பும் நேரத்தையும் அவைகள் அறிந்திருக்கின்றன. அதைப்போலவே தகைவிலான் குருவிகளும் வெப்பமான தேசத்திலுள்ள தங்கள் கூடுகளுக்கு வருடாவருடம் திரும்பிச் செல்கின்றன. அவைகள் நாட்களை அறிகின்றன, காலங்களைக் கடைப்பிடிக்கின்றன. அவைகளுக்குள் வழிகாட்டும் கணிணி அமைப்பு போன்ற ஒரு உள்ளுணர்வு காணப்படுகிறது. ஆனால் இங்கேயோ பறவைகள், பிராணிகளைவிட பன்மடங்கு
ஞானமுள்ளவர்களாக இருந்தும் தங்களுக்குள் தேவன் வைத்துள்ள உள் மனச்சாட்சிக்கு கீழ்ப்படியாத மக்கள் இருந்தனர். அதினாலே தேவன், ஆகாயத்துப் பறவைகள் காலங்களை அறிந்து செயல்படும்போது, என் ஜனங்கள் என் நியாயத்தீர்ப்பை அறியாமல் இருப்பது எப்படி? என்று வினவினார். நாங்கள் ஞானிகளென்றும் வேதம் எங்களிடத்தில் இருக்கிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். தேவனின் வேதம் கைகளில் இருந்தாலும் அதற்கு அவர்கள் கீழ்ப்படியாமல் போனால் அதினால் என்ன பலன்? நியாயப்பிரமாணத்தை உபயோகப்படுத்தாத நிலையில் அவர்கள் நியாயப்பிரமாணம் இல்லாமல் இருந்திருக்கலாமே!
அன்பர்களே, நம்மை நாம் வஞ்சித்துக்கொள்ளாதிருப்போம். தேவனின் பிரமாணங்களை நன்கு அறிந்தும் அவருக்கு விரோதமாக துணிகரமாகப் பாவம் செய்யாதிருப்போம். அவர் கோபாக்கினை நம்மேல் வருமுன்னமே, நாம் மனம்திருந்தி அவரிடம் திரும்புவோம்.
ஜெபம்: ஆண்டவரே, உம் நியாயப்பிரமாணங்களையும், கட்டளைகளையும் என் கரங்களில் கொடுத்திருக்கிறீர். ஆனால் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு பாவம் செய்கிறேன். என்னை நீர் உணர்த்துகையில், என் பாவங்களை அறிக்கையிட்டு உம்மிடம் திரும்புகிறேன். என்னை மன்னியும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments