வாசிக்க: மாற்கு 12: 28-34
மூளையறிவால் மட்டும் நாம் தேவராஜ்யத்தில் சேரமுடியாது
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் ... தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். - யோவான் 1:12
மதம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தாலும், அதுவே அவரை இயேசுவின் மெய்யான சீஷனாக்க முடியாது. இன்றைய வேதபகுதியில் சொல்லப்பட்ட வேதபாரகன் மற்றவர்களைவிட அதிகமாய் அறிந்தவன் என்பது நிச்சயம். கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது என்ற அவனது கேள்விக்கு, கர்த்தரிடத்தில் அன்புகூருவாயாக ... பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று பதில் தந்தார் இயேசு. அதற்கு அவன், சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம் என்று கூறினான். மற்ற பரிசேயர்கள், வேதபாரகர் காணாத உண்மையை அவன் கண்டான். அவன் சொன்னது சிறப்பான வார்த்தைகளே. வசனம் 34ல், அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்று கூறினார். ஆனால், இந்த மனுஷன் ஆண்டவரது சீஷர்களில் ஒருவனானான் என்று எந்த இடத்திலும் வேதம் சொல்லவில்லை. ஐசுவரியவானான இளைஞன் போல இவனும் கிறிஸ்துவைப் பின்பற்ற மனதின்றிப் போனான் என்ற வேதனைமிக்க முடிவுக்கு நாம் வருகிறோம். (மாற்கு 10:17-25) சுருங்கச் சொன்னால், அவன் தேவராஜ்யத்துக்கு தூரமானவனாக இல்லாதிருந்தும், அதற்குள் நுழையாதிருந்தான்!
அன்பானவர்களே, இந்த வேதபாரகன் போலவே அநேக ஜனங்கள் இருக்கின்றார்கள். பலர் இயேசுவை விரும்பினாலும், அவரது போதனைகளைக் கேட்டாலும், அவரை தங்களுடைய இரட்சகராக, ஆண்டவராக ஏற்றுக்கொள்ளாமலேயே வாழ்ந்து மரிக்கிறார்கள். நம் இரட்சிப்பின் நம்பிக்கையை நமது மூளை அறிவிலே வைக்காதபடி கவனமாயிருப்போம். அப்படிப்பட்ட காரியங்கள் நடக்கும் பொல்லாத நாட்களில் நாம் வாழ்கிறோம். கல்வி ஞானம் மட்டுமே ஒருவனைக் கிறிஸ்தவ விசுவாசியாக்க முடியாது என்று நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். வேதாகமக் கோட்பாடுளை நம் மூளையில் மட்டும் வைக்காமல் நம்முடைய இருதயத்திலும் ஏற்றுக்கொள்ள, அதன்படி நம் வாழ்க்கையை நடத்தவேண்டும். நற்செய்தியின் சத்தியம் நம் மூளையிலிருந்து நம் இருதயத்துக்குள இறங்கி, நம் வாழ்வை நடத்துகிறதா?
ஜெபம்: ஆண்டவரே, மனனம் செய்த வசனங்களை என்னால் சொல்லமுடியும், சுவிசேஷ சத்தியம் எனக்கு தெரியும்; ஆனால், மூளையறிவால் நான் பெருமை கொள்ளாமல், உம்மை என் ஆண்டவராக இருதயத்திலும் வாழ்விலும் வைப்பேன். கிறிஸ்துவின் மெய் சீஷனாய், உமது உண்மை சாட்சியாய் நானிருப்பேன். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments