top of page

சனி, டிசம்பர் 21 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: ஏசாயா 9: 6,7


சமாதானமற்ற உலகுக்கு தேவசமாதானம் கொடுங்கள்


சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை...  

- யோவான் 14:27


கிறிஸ்துமஸ் என்றாலே நம் உள்ளத்தில் சமாதானமும் அழகும் நிறைந்த ஒப்பில்லா திருஇரா நினைவிற்கு வரும்; அங்கே மேய்ப்பர்கள் மந்தையைக் காத்ததும், தூதர்கள் பாடியதும், மரியாள் பிள்ளையைப் பெத்லகேம் தொழுவத்தில் கிடத்தியதும் நினைவில் வரும். ஆனால், கிறிஸ்துமஸ் குழந்தை இயேசுவின் பிறப்பை நினைவுகூருவதைவிட மிக மிக மேலானது. உலகுக்கு தேவன் கொடுக்கின்ற சமாதானத்தைக் குறித்து கிறிஸ்துமஸ் பேசுகிறது. பழங்காலக் கதை ஒன்று உண்டு. அதில், பெத்லகேம் பாலகனை முன்னணையிலிருந்து தூக்கிச் சென்றவுடன் அங்கே இருந்த பசுக்கள், கழுதைகள், செம்மறிகள், வெள்ளாடுகள் எதுவுமே, அவரைக் கிடத்தியிருந்த இடத்திலுள்ள வைக்கோலை சாப்பிடவே இல்லை. அங்கிருந்த சிறுவன் ஏன் அப்படி அவைகள் செய்கின்றன என்று ஆச்சரியப்பட்டான்; அவரை கிடத்தியிருந்த வைக்கோல் கற்றைகள் அனைத்தும் பொன்னாக மாறிப்போயிருந்தன என்று பின்னர் கண்டுகொண்டான்! இது ஒரு பழங்கதையாக இருந்தாலும், நமக்கு இந்த உவமை கூறும் காரியம் ‡ எங்கே இயேசு வருகின்றாரோ, எந்த இருதயங்களில் அவர் பிறக்க இடம் கிடைக்கிறதோ, அங்கே எல்லாம் மாறுகிறது, நமது இருதயங்களை தேவசமாதானம் நிரப்பவேண்டுமென்று விரும்புகிறோமோ, அந்த தேவசமாதானத்தால் நிரம்புகின்றன. 

அன்பானவர்களே, சண்டைகள் நிரம்பின உலகத்தில் நாம் வாழ்கிறோம்; அங்கே சமாதானம் இல்லை, வெறுப்பும் சச்சரவும் எங்கும் காணப்படுகிறது. எனவே, கிறிஸ்துவால் மாற்றப்பட்ட வாழ்வை வாழுகின்ற மக்களாகிய நாம் சமாதானத்தை உண்டு பண்ணுகிறவர்களாக வாழ்வோம். 2 கொரிந்தியர் 5:18-20ல் பவுல் கூறியிருப்பதுபோல, தேவன் நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாகுதலின் ஊழியத்தை நம்மிடம் கொடுத்திருக்கிறார்! ஒப்புரவாக்குதலின் செய்தியைக் கொடுக்கும் ஊழியத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளான நாம் சமாதானப் பிரபுவைப் பின்பற்றுபவர்கள் என்று உலகுக்குக் காண்பிப்போம். இந்தக் கிறிஸ்துமஸ் நாட்களில், அருகாமையில் உள்ள ஜனங்களுக்கு தேவசமாதானத்தைக் கொண்டுவர நாம் கடந்த ஆண்டில் செய்தது என்ன என்று நம்மைக் கேட்டுக் கொள்வோம். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நாம் நினைகூருவதற்கு மட்டுமே வார்த்தை மாம்சமாய் வரவில்லை; எங்கேயோ உள்ள சமாதானத்தை வரையோவியமாக்க அவர் வரவில்லை; நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்ற சவால்கள் மத்தியில் அவரது தெய்வீக சமாதானத்தை நமக்குத் தர வந்தார்!    
ஜெபம்: ஆண்டவரே, 2000 ஆண்டுகள் முன் நடந்த உம் பிறப்பின் உணர்ச்சிபூர்வ நினைவுகூருதல் மட்டுமே எனக்குத் தேவையில்லை. உடைந்த இந்த உலகில் நீர் என்னை வைத்திருக்கும் குடும்பத்தில், சமுதாயத்தில், சபையில் உம்முடைய ஸ்தானாபதியாய், சமாதானம் கொண்டுவர தெய்வீக சமாதானத்தால் நிரப்பும். ஆமென்

தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page