top of page

சனி, டிசம்பர் 07 || தெளிதேன் துளிகள்

வாசிக்க: யோவான் 21: 15-17



நம் தேவபக்தியை அளவிடுவது எப்படி?


 ... இவைகளில் அன்பே பெரியது. (1 கொரிந்தியர் 13:13)

உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது. (1 கொரிந்தியர் 16:14)


இன்றைய வேதபகுதியில் நமது ஆண்டவர் உயிர்த்தெழுந்த பிறகு தரிசனமான பல சம்பவங்களில் ஒரு சம்பவத்தைக்குறித்து வாசிக்கிறோம். ஆண்டவரோடு மூன்றரை வருடங்கள் சஞ்சரித்தபிறகும், பேதுரு அவர் சிலுவையிலறையப்படுவதற்குமுன் அவரை மூன்றுமுறை மறுதலித்தான். ஆயினும் தான் உயிர்த்தெழுந்தபின் அவனைச் சந்தித்த சமயத்தில், ஆண்டவர் இயேசு அவனது தவறுகளையோ தோல்விகளையோ சுட்டிக்காட்டி ஒருவார்த்தையும் பேசவில்லை. மாறாக அவனை நோக்கி,யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று கேட்டார். (யோவான் 21:15)


அன்பானவர்களே, நாம் ஆண்டவராகிய இயேசுவின்மேல் கொண்டிருக்கும் அன்பே நமது ஆவிக்குரிய வளர்ச்சியின் அளவுகோலாகும். இறையியல் பட்டமோ, சபையின் தலைமைப் பொறுப்போ, சபைக் காரியங்களில் அதிகமான ஈடுபாடோ நமது ஆவிக்குரிய நிலையை உண்மையாய் வெளிப்படுத்துவதில்லை. ஒருவர் முழுநேர ஊழியராக பல ஆண்டுகள் சேவைபுரிந்தாலும் அதுவும் ஆவிக்குரிய வளர்ச்சியின் அளவுகோலாகமுடியாது. பல ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கெடுப்பது, மிகச் சிறந்த வேத அறிவைப்பெற்றிருப்பது போன்றவைகூட அதற்கு அளவல்ல. கர்த்தருடைய பார்வையில் நாம் அவர்மீது காட்டும் அன்புமாத்திரமே நம் தேவபக்திக்குரிய அளவுகோலாயிருக்கிறது. வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆண்டவர் எபேசு சபையைக் கடிந்துகொள்வதை நாம் வாசிக்கிறோம். அந்த சபையிலிருந்த பல நல்ல குணங்களைக் கூறிவிட்டு, ஆனாலும், ஆதியிலே நீ கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்கு குறையுண்டு என அவர் கூறுகிறார். (வெளிப்படுத்தின விசேஷம் 2: 4) அன்பில் குறைவுபடுவோமானால் மற்ற நற்குணங்கள் அதை ஈடுசெய்யமுடியாது என்பதை நாம் உணரவேண்டும். நமது ஆண்டவர் எல்லாவற்றைப் பார்க்கிலும் அவர்மீது நாம் முழு இருதயத்தோடு அன்புகூரவேண்டும் என விரும்புகிறார். எனவே, அவர் நம்மீது காண்பித்த எல்லையற்ற அன்பை எப்போதும் நினைவுகூர்ந்து, நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும் அவரில் அன்புகூருவோம். அப்போது அவர் அகமகிழ்வார்.



ஜெபம்: ஆண்டவரே, உம்மீது நான் கொண்டுள்ள அன்பில் நாளுக்குநாள் வளர எனக்கு உதவி செய்யும். இவ்வுலக வாழ்வின் கவலைகளோ, சோதனைகளோ உம்மீதுள்ள அன்பிலிருந்து என்னை விலக்கிவிடாதபடி காத்துக்கொள்ளும். என் ஆதி அன்பு எந்நாளும் குளிர்ந்துபோகக்கூடாது ஆண்டவரே. ஆமென்.



தெளிதேன் துளிகள்

 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page