top of page

சனி, ஜனவரி 25 || தெளிதேன் துளிகள்


விடாமுயற்சியைக் கர்த்தர் ஆசீர்வதிப்பார்!


சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்... - யாக்கோபு 1:12



உறுதியான, நிலையான, நிரந்தரமான தொடர்முயற்சியே விடாமுயற்சி எனலாம். எந்த ஒரு காரியத்தாலும் தடைபடாத செயல்பாடு, இந்த விடாமுயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். நமது வாழ்வில் பாடுகளும், தடைகளும், எதிர்ப்புகளும் வந்தாலும் நமக்கு விடாமுயற்சி அவசியம். இந்த விடாமுயற்சிக்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு நோவா. பொல்லாத சந்ததியை அழிக்கும்பொருட்டு தாம் ஜலப்பிரவாகத்தை அனுப்புமுன், கர்த்தர் நோவாவை நோக்கி, நீயும் உன் குடும்பமும் தப்பிக்கொள்ளும்படி நீ ஒரு பேழையை உண்டாக்கு என்றார். இந்தப் பேழை 450 அடி நீளம், 75 அடி அகலம் மற்றும் 45 அடி உயரம் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் அவர் கட்டளையிட்டார். தற்காலக் கப்பல் பொறியாளர்கள், இந்த அளவுகள் கடலில் பயணிப்பதற்கு ஒரு கப்பலுக்கு மிகவும் உகந்த அளவுகள் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.  இந்தப் பேழையைச் செய்துமுடிக்க நோவாவுக்கு குறைந்தபட்சம் நூறு ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று சில வேத அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த இடைப்பட்ட காலத்தில் நோவா எத்தனை அதிகமாக நிந்திக்கப்பட்டு கேலிசெய்யப்பட்டிருப்பான் என்று சிந்தித்தால், அவனது விடாமுயற்சி எத்தனை உயர்ந்ததாக இருந்திருக்கவேண்டும் என்பது விளங்கும். அவன் அப்படிச் செய்து முடித்தபடியால்தான் கர்த்தர் அவனையும், குடும்பத்தையும் பெருவெள்ளத்திலிருந்து காத்தார்.



	அன்பானவர்களே, உங்களது முயற்சிகளுக்கு பதில் வரவில்லை என்பதற்காக பாதிவழியில் நிற்கவேண்டாம். மற்றவர்களுடைய ஏளனப் பேச்சைப் பொருட்படுத்தவேண்டாம். கர்த்தருடைய சித்தம் நிறைவேறும்வரை தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்து கொண்டிருங்கள். அவர் நிச்சயம் அதற்குரிய பலனை தந்து உங்கள் எதிரிகளின் கண்முன்னே உங்களை கனப்படுத்துவார்.   

ஜெபம்: ஆண்டவரே, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ நான் பிரயாசப்பட்டாலும் என்னால் முடிவதில்லை. மற்றவர்களுக்கு சுவிசேஷம் சொல்வதிலும் நான் தவறுகிறேன். என்னை மன்னித்து, விடாமுயற்சியுடன் நடக்க எனக்கு கிருபை தாரும். நிந்தையைத் தாங்கிக்கொள்ள உமது உதவி எனக்குத் தேவை.  ஆமென். 
 

Our Contact:

EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.

Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page