சனி, ஜனவரி 18 || தெளிதேன் துளிகள்
- YHWH With Grace
- Jan 18
- 1 min read
ஆவியில் நிறைந்து ஜெபிக்கிறவர்களாயிருப்போம்!
எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி... (எபேசியர் 6:18)
ஃபிராங்க் லாபாக் என்ற மிஷனரி, வேதத்திலுள்ள, இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள் (1 தெசலோனிக்கேயர் 5:17) என்ற வசனத்தை அப்படியே நம்பி கடைப்பிடித்தவர். இதைச் செயலாக்க அவர் பகுதிநேர ஜெபங்கள் என்ற புது யுக்தியைக் கடைப்பிடித்தார். அதாவது, ஒரு நாளின் பல பகுதிகளை ஜெபத்துக்காகப் பயன்படுத்தும்படி கிடைத்த குறுகிய கால அவகாசங்களையும் பயன்படுத்திக்கொண்டார். உதாரணத்திற்கு, பஸ் வருவதற்காகக் காத்துக்கிடக்கும் நேரம், டிக்கெட் மற்றும் இதர காரியங்களுக்காக வரிசையில் நிற்கும் நேரம் போன்ற நேரங்களை வீணாக்காமல், ஜெபிக்க ஆரம்பித்தார். போக்குவரத்து நெரிசலில் சிக்கும் வேளைகளில் கர்த்தர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி கூறுவார்.
அன்பானவர்களே, நாம் மருத்துவரைப் பார்ப்பதற்காக மருத்துவமனையில் அதிக நேரம் காத்திருக்கிறோம். மேலும் நம்முடைய பிரயாணங்களுக்காக இரயில் நிலையம் அல்லது விமான நிலையங்களில் அதிக நேரம் காத்திருக்கிறோம். இப்படிப்பட்ட நேரங்களை வீணடிக்கிறோமே என்று உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா? அடுத்தமுறை நாம் எங்காவது சிக்கித் தவிக்கும்போது, ஃபிராங்கை நினைவுகூர்ந்து, ஜெபிக்கத் துவங்குவோம். அது ஒருவேளை பத்து நிமிடமாக இருக்கலாம். அல்லது அரை மணிநேரமாக இருக்கலாம் அல்லது இரண்டு நிமிடங்களாகக்கூட இருக்கலாம். ஆனால் நீங்கள் இப்படி ஒரு முடிவெடுத்து ஜெபிக்க ஆரம்பித்தீர்களானால் ஆவியானவர் உங்களுக்கு பல காரியங்களை நினைப்பூட்டி ஜெபிக்கச் செய்வார். இதனால் உங்களுக்கு இரட்டிப்பான நன்மை உண்டாகும். ஒன்று, நீங்கள் யாருக்காக ஜெபிக்கிறீர்களோ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஒரு ஜெபவீரனாகச் செயல்பட்டதற்காக கர்த்தர் உங்களையும் மனமகிழ்ந்து ஆசீர்வதிப்பார்.
ஜெபம்: தேவனே, நான் அனுதினமும் வீணாக்குகிற சிறு சிறு நேரங்களை ஜெபவேளைகளாக மாற்றிக்கொள்ள என்னை ஊக்குவித்தீர். உமது ஆவியின் துணையோடு தேவையிலுள்ள மக்களுக்காக, நீர் நினைப்பூட்டுகிற அநேகக் காரியங்களுக்காக ஜெபிக்கிற பிள்ளையாக என்னையும் மாற்றும். ஆமென்.
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
Comments