வாசிக்க: யோவான் 15: 1-8
இயேசுவுக்காக நாம் கனிகொடுக்கிறோமா?
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்...
- யோவான் 15:1,2
இந்த உருவகத்திலே, இரண்டுவித கொடிகள் இருக்கின்றன - இது இரண்டுவித மக்கள் கூட்டத்தை சுட்டிக்காட்டுகிறது - சிலர் கனிகொடுப்பதே இல்லை, சிலர் கனிகொடுக்கிறார்கள். கனிதராத மக்கள் அவர்களது வாழ்வில் தேவன் கொண்டுள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை. இவர்களை நாம் விசுவாச துரோகிகளான கிறிஸ்தவர்கள் - புறம்பாக கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் என்று கூறிவிட்டு உள்ளாக அவரைவிட்டு விலகுகிறவர்கள் - என்று சொல்லலாம். வெளிப்புறத் தோற்றத்தில், பக்திமான்களாய்த் தோன்றுவார்கள், சமய சடங்காச்சாரங்களைப் பின்பற்றுவார்கள், ஆனால் அவர்களுக்குள் கனி இருக்காது. காய்ந்த கொடியான அவர்கள் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படுவார்கள். இப்படிப்பட்ட விசுவாசிகளைப்பற்றி இயேசு பல பகுதிகளில் மிகத் தெளிவாக பேசியுள்ளார். மத்தேயு 7:21ல், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என கூறியிருக்கிறார். பிறகு அவர்களது செய்கைகளை அவர் விளக்கி, தாங்கள் நல்ல கிறிஸ்தவர்கள் என்பதற்கு அவைகளே அத்தாட்சி என்று அவர்கள் எண்ணுவார்கள் என்றும், கிறிஸ்துவாகிய தாம் அதை ஒருபோதும் ஏற்பதில்லை என்றும் கூறினார். தங்களது செய்கையை முக்கியப்படுத்தினார்களே ஒழிய கிறிஸ்து தங்களில் செய்த கிரியையை அவர்கள் முக்கியப்படுத்தவில்லை.
இந்த உவமையானது கூறுவது என்னவென்றால்: மெய்யான திராட்சச்செடியுடன் கொண்டுள்ள உண்மை உறவே ஜீவனுக்கு ஏதுவாகும்; ஜீவன் இருக்கும்போதுதான் அங்கே கனி இருக்கும். எல்லாக் கொடிகளும் அதிகக் கனிகொடுப்பதில்லை என்றாலும் - அங்கே கனி நிச்சயம் இருக்கும். கனி என்பது கிறிஸ்துபோன்ற குணாதிசயம், கிறிஸ்துபோன்ற குணம், கிறிஸ்துபோன்ற வாழ்க்கை முறையே!
அன்பானவர்களே, கிறிஸ்துவுக்காகக் கனிகொடுக்கவே தேவன் நம்மை இரட்சித்தார். நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறியும் கனிகொடுக்காவிட்டால், நம்மை ஆராய்ந்துபார்த்து, தாமதமின்றி குறைகளைச் சரிசெய்துகொள்வது மிகவும் அவசியம்.
ஜெபம்: ஆண்டவரே, உம்மை விசுவாசிக்கிறேன் என்று புறம்பே கூறும் பெயர்க் கிறிஸ்தவனாய் நான் இல்லாமல், மெய் திராட்சச்செடி கிறிஸ்துவோடு இணைந்து, அவரின் சாரத்தினால் கனி தந்து உம்மை பிரியப்படுத்துவேன். பரிசுத்தமும், நீதியும், தேவனை கனப்படுத்தும் நடத்தையும் என்னில் வெளிவர உதவும். ஆமென்.
தெளிதேன் துளிகள்
Our Contact:
EL-SHADDAI LITERATURE MINISTRIES TRUST, CHENNAI - 59.
Office: +91 9444456177 || https://www.honeydropsonline.com
留言